பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பாட்டி போய்விட்டாள். நான் நாற்காலியில் உட்கார்ந்தபடி அந்தப் படத்தை-'பைத்தியத் தின் திருவுருவத்தை-எத்தனையோ முறை பார்த்துவிட்ட புகைப்படத்தைப் பார்த்தேன். வெறும் படமா அது? - உயிர் பெற்று, நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது போலல்லவா இருக்கிறது அது? தலையிலே முண்டாசு, மேலே ஒரு கோட்டு; முறுக்கி விடப்பட்ட மீசை வெற்றிலை போட்டுச் சிவந்த வாய்; நெற்றியிலே சந்தனப் பொட்டு; எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கண்கள்! ஊடுருவி உள்ளத்துக்குள்ளே பாயும், ஒளிமிக்க-ஒரளவு பயங்கரமான - ஆனால் திடசித்தத்துக்கு உறைவிடமான, எதிர்ப்பைப் பொருட்படுத்தாது உலகனைத்தையும் அறைகூவி அழைக்கும் விழிகள்! என் கண்கள் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது மனம் பின்னோக்கித் தாவிச் சென்று, அவர் வாழ்க்கையை ஆராய்கிறது. சிட்டுக் குருவிபோலத் தன்னிச்சையாக அங்குமிங்கும் பறந்து திரிந்தார் இவர். யாரையும் பொருட்படுத்தவில்லை; எவருடைய தயவையும் விரும்பவில்லை. தாங்கமுடியாத கஷ்டங்களையும் அமைதியாகப் பொறுத்துக்கொண்டார். வறுமை யென்னும் பெருநெருப்பிலே வெந்து தவித்த காலத்திலும், ' எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!' என்று பாடிக் கொண்டேயிருந்தார்; தேசம் சுதந்திரமடைய வேண்டுமென்பதற்காகத் துடித்தார்; பாரத நாட்டுக்கு விடுதலையளிக்கும்படிக் கண்ணனையும் பராசக்தியையும் மண்டியிட்டுக் கண்ணிர் பெருக்கித் தொழுதார். உள்ளமெல்லாம். உயிரெல்லாம் தேசபக்தி வெறியாகவே இருந்தது அவருக்கு. அந்த வெறியிலே, அந்த உணர்ச்சியிலே இதுவரை தமிழ் மொழியில் சுதந்திரத்தைப் பற்றித் தோன்றியிராத பல அருமையான கீதங்களை இசைத்தார்; எல்லோரையும் ஒரு குலமாய்க் கருதினார்: நோக்கிய திசையெல்லாம் ஈசனையே கண்டார்; சிறுமையை வெறுத்தார்; 'மானம் சிறிது, வாழ்வு பெரி'தென்றெண்ணும் மக்களின் மனப்பான்மையை நினைத்து நினைத்து மனம் நொந்தார்; அநீதியைக் கண்டு பொங்கினார்; மூடப் பழக்க வழக்கங்களை வெறுத்தார் - வாழ்க்கையை நாடகமாக ஆடிவிட்டுச் சென்ற இணையற்ற ஒரு நடிக சிகாமணி!