பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 'கடவுளைப் படைத்த மனிதன்' என்ற தலைப்பின் கருப்பொருள் இதுவே! மனிதன் படைத்த, படைக்கிற, படைக்கும் படைப்புகள் பல, மிகப் பல. அவை பல வகைப் பட்டவை, பலதரப்பட்டவை அவற்றுள் ஆழ்ந்தகன்ற அரும்பயன் உடையவை உண்டு. அவற்றின் வளர்ச்சிப் பண்புகளை விளக்குடிவையே வரலாறுகள், இயல் நூல் துறைகள், கலைத்துறைகள், மொழி, குடும்பம், சமூகம், ஊர். நாடு, இனம் ஆகியவைகூட இப்படைப்புகளுக்கு அடிப்படையாக மனிதன் அமைத்துக் கொண்ட அமைப்புக்களே! ஆனால், இத்தனை அரும்படைப்புகளையும் தாண்டி, இத்தனை படைப்புக்களையும் தன்னுட் கொண்ட முழு நிறைப் படைப்பு கடவுட் கருத்தேயாகும். வியப்புக்குரிய எத்தனையோ பொருள்களைப் படைத்தவன் மனிதன். ஆனால் "வியப்புக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும் விட வியப்புக்குரியவன் மனிதனே' என்பது அறிவுடையோர் கருத்து. அத்தகு மனிதனின் வியத்தகு முதற் படைப்பே கடவுட் கருத்து. விலங்கு நிலையிலிருந்து அவனைப் பிரித்துக் காட்டும் பண்பும், விலங்கு நிலையிலிருந்து உயர்ந்த பின் அவன் படைத்த முதல் படைப்பும் அதுவே. மற்ற எல்லாப் படைப்புக்களுக்கும் அதுவே மூலப் பண்பாய் அமைந்து, அவன் இன வளர்ச்சியுடன் வளர்ச்சியாக இடையறாது வளர்ந்து வந்துள்ளது. கடவுட் கருத்து, மனிதன் தலை முறை கடந்து தலை முறையாக, ஊழி கடந்து ஊழியாக, நாடு கடந்து நாடாக, எல்லையற்ற காலம் தன் இன வாழ்வின் மொத்தப் பயனாகப் படைத்த படைப்பாகும். அதுவே அவன் இன்னும் படைத்து வருகிற, படைத்துப் படைத்துத் தேர்ந்த தேர்ச்சியின் மூலம் அவன் மெருகூட்டிப் புதுப்பித்து வருகிற அருங்கலைப் படைப்பு ஆகும். கடவுட் கருத்து மனிதன் படைப்பு. ஆனால், கடவுளே தன்னைப் படைத்ததாக மனிதன் கருதுகிறான் ஆன்மிக முறையில் இக்கருத்து தவறன்று. ஏனெனில் கடவுள் கருத்தே மனிதனின் இனப்பண்பை வளர்த்துள்ளது. வளர்ந்து வருகிறது. பிள்ளையைப் பெற்றவள் தாய். தன் பிள்ளையை, 'அம்மா, என்னைப் பெற்ற அம்மா!' என்று அவள் அன்புடன் கொஞ்சுகிறாள்