பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விந்தன்

இது என்ன தொல்லை? - இரண்டு மூன்று நாட்களாக என்னை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கப்பட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் இப்படி ஆரம்பித்து விட்டாரே, இவர்? - இந்தத் தொல்லையிலிருந்து மீளுவது எப்படி?

இந்த அண்ணா எங்கே போய்விட்டான், என்னைத் தயாராயிரு’ என்று சொல்லிவிட்டு? - இந்தப் பாட்டி யாவது இங்கே இருந்து தொலைந்திருக்கக்கூடாதா? அவளுக்கு எப்போது பார்த்தாலும் சிவநாமாவளிதான்; போகிற வழிக்குப் புண்ணியம் தேடுகிறாளாம் புண்ணியம்; கண்ணுக்கு முன்னால் பாவம் செய்யத் துணிபவர்களைக் கண்ணெடுத்துக் கூடப் பார்க்காமல் - இந்த மாமி அடிக்கொரு தரம் எதையாவது நினைத்துக் கொண்டு மாடிக்கு வருவாள் - அவளைக் கூடக் காணோமே இன்று?

இப்படி நான் எண்ணிக் கொண்டிருந்தபோது, என்னுடைய அகத்தை அவர் காணாவிட்டாலும் முகத்தை யாவது கண்டிருக்கக்கூடாதா? - அதைக் கூடக் கண்டு கொள்ளவில்லை அவர். ‘நீ என்னை வா’ என்று அழைக்கா விட்டால் என்ன, உன் கண்ணின் இமைகள்தான் என்னை ‘வா, வா என்று அழைக்கின்றனவே?’ என்று அசடு வழியச் சொல்லிக் கொண்டே என்னை நெருங்கினார்.

அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியுமா, என்னால்? - ‘நில்லுங்கள்: உங்களைப் போன்றவர்களுக்கு இது அழகல்ல!” என்றேன் நான்.

‘அழகு அத்தனையும்தான் உன்னை அடைக்கலம் அடைந்துவிட்டதே! என்னிடம் அழகு ஏது? இந்த உலகத்தில்தான் அழகு ஏது?” என்று அடுக்கிக் கொண்டே போனார்.அவர்.