பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 105

எவ்வளவு பெரிய மனிதர் எவ்வளவுக் கீழே போய் விட்டார், என்னால்? - இதனால்தான் பெரிய மனிதர்களில் சிலரை ஆண்கள் என்னதான் மதித்தாலும், பெண்கள் மதிக்கமாட்டோம் என்கிறார்களோ? இவர்களுடைய பலவீனம் அவர்களுக்குத்தான் தெரிகிறதோ?

‘மாமா என்னுடைய அன்னையுடன் பிறந்தவர்கள் நீங்கள்; அன்னைக்குப் பிறகு அன்னையாக இருக்க வேண்டியவர்கள் நீங்கள் - அப்படிப்பட்ட உங்களை இப்படியெல்லாம் பேச வைத்தது, பேச வைப்பது என் அழகுதான் என்றால், அந்த அழகு அழிந்து போகட்டும்!” என்று நான் அதை அவருக்கு முன்னாலேயே அழித்துக் கொள்ள அங்கேயே ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தேன் - ஒன்றும் கிடைக்காமற் போகவே, ‘என்னை மன்னித்து விடுங்கள்; மாமிக்குத் துரோகம் செய்ய இன்று மட்டுமல்ல; என்றுமே விரும்பவில்லை நான்’ என்று விம்மினேன்.

‘தெரிந்தா செய்யச் சொல்கிறேன், தெரியாமல்தானே செய்யச் சொல்கிறேன்: ‘

அட, கடவுளே! பெரிய இடத்துப் பண்பு என்பது இதுதானா? யாருக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அது என் மனத்துக்குத் தெரியாமற் போய்விடுமா? - அந்த மனம் கணத்துக்குக் கணம், நீ துரோகி, நீ துரோகி’ என்று என்னை இடித்துரைக்காமல்தான் விட்டுவிடுமா?- எத்தகைய கொடுமைக்கு என்னை உள்ளாக்கப் பார்க்கிறார், இவர்?

இப்படி நினைத்தேனோ இல்லையோ, ‘மாமி, மாமி'என்று கத்தினேன், நான் -ஆம், அதைவிட வேறு வழியொன்றும் தோன்றவில்லை எனக்கு - அவரிடமிருந்து தப்ப!