116 விந்தன்
அவரவர்களே பிழைத்துக் கொள்வார்கள். தாங்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப் பிழைக்க வைக்கும் திருப்பணியில் யாரும் இறங்க வேண்டிய தில்லை; அதற்கு அவர்களை ‘மடையர்'களாக்கி தங்களைத் தாங்களே ‘புத்திசாலிகளாக்கிக் கொள்ள வேண்டியதில்லை!
இந்நூலாசிரியர் கூறுகிறார், “எதிர்காலத்தில் திருமணம் போன்ற சடங்குகள் மறைந்து, ஆணும் பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நட்பை வைத்துக்கொண்டே சேர்ந்து வாழ ஆரம்பித்துவிடுவார்கள்!’ என்று - எப்படி ஆராய்ச்சி? தாயென்றும் சேயென்றும் பாராமல், தங்கையென்றும் தமக்கையென்றும் பாராமல் கூடிவாழ்ந்த அந்தக் காட்டு மிராண்டிக் காலத்தை நோக்கித் தமிழ் மக்கள் திரும்ப வேண்டுமென்று நினைக்கிறாரா, இவர்? வருந்துகிறோம்; ஒரு கல்லூரிக்குப் பேராசிரியராயிருக்கும் இந்நூலாசிரியர் இப்படியெல்லாம் எழுதுவதற்காக வருந்துகிறோம்.
வேண்டாம், இந்த விபரீதம்! இனியாவது எதிர் காலத்தைக் கணிக்கும் வேலையை ‘மரத்தடி ஜோசியர்களிடம் விட்டுவிட்டு, நிகழ்காலத்தைக் கணிக்கும் வேலையில் இவர் ஈடுபடட்டும் - தமிழுக்கு நல்லது; தமிழனுக்கும் நல்லது.
அதற்காக வரலாறு’ என்ற பேரால் இறந்தகாலத்தைத் திரும்பிப் பார்த்து, செத்துப் புதைத்த பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, ஆகா! இதன் பெருமையே பெருமை! அருமையே அருமை!’ என்று காட்டும் வெட்டியான் வேலை'யில் இவர் இறங்கிவிடாமல் இருப்பாராக!”
-நம்பி.