பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 விந்தன்

ஆம், அவரும் என்னைப் போலவே இளம் பிராயத்தில் காதல் என்னும் மாயையால் ஆட்கொள்ளப் பட்டுப் பேராசிரியரைக் காதலித்தாராம். பேராசிரியரோ என்னைப் பதம்பார்த்ததுபோல் அவரையும் பதம்பார்த்து விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழலாம் என்றாராம். இந்த நிலையிலேத் தன்னால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் துணிந்துவிட்ட தன் தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவர் வேறொருவரை மணந்து கொள்ள நேர்ந்ததாம். மனமற்ற அந்த மணத்துக்குப் பிறகும் தன்னுடைய உடலைத் தனக்கு மாலையிட்ட வரிடம் ஒப்படைக்காமல் உள்ளத்தை மட்டுமே ஒப்படைத்து வாழ்ந்துவந்தாராம், அவர். இதனால் ஏற்பட்டப் பூசலில் இருவரும் பிரிந்து வாழ நேர்ந்தபோது, மறுபடியும் தன்னுடைய ‘இயற்கையோடு இயைந்த வாழ்வை அவருடன் தொடங்க வந்தாராம், பேராசிரியர். அதற்கு உடன்பட அம்மையார் மறுத்த போது, வருந்துகிறேன் அம்மையே, வருந்துகிறேன்; எனக்காக நீ மேற்கொண்டுள்ள அவல வாழ்வு குறித்து நான் வருந்துகிறேன்’ என்று வழக்கம் போல் அழ ஆரம்பித்துவிட்டாராம், அவர் -

ஆம், சிரித்துச் சிரித்துச் சிலர் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வது போல, அழுதழுது தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லவராயிருந்து வந்திருக்கிறார், அந்த நல்லவர் அது தெரியாமல் தானே நானும் அவரிடம் ஏமாந்து போனேன் - நான் அடைந்த அந்த ஏமாற்றத்தை அவரும் அடைந் திருக்கிறார்; அதற்குப் பிறகு அவருடைய கணவரின் உடல்நிலை சரியில்லை என்றத் தகவல் எட்டியிருக்கிறது; போய்ப் பார்த்திருக்கிறார். ‘உடல்நோய் ஒன்றுமில்லை; உளநோய்’ என்று தெரிந்திருக்கிறது. தன் மனம் தன்னை உறுத்த, தான் செய்தத் தவறுக்காக வருந்தியிருக்கிறார். அந்த நிலையிலே,சக ஆசிரியர் என்ற முறையைச் சாக்காக வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்திருக்கிறார்.