பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 169

அவள் அத்துடன் என்னை விடவில்லை; “இங்கே ஏதடி, உனக்கு வாத்தியாரம்மா?’ என்று வேறு கேட்டு என்னை மேலும் ஒரு பொய் சொல்லத் தூண்டினாள்.

நான் தயங்கவில்லை; பெங்களூரிலிருந்த வாத்தி யாரம்மாதான்; இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்!” என்று சொல்லி, அவளுடைய வாயை அப்போதைக்கு அடைத்துவைத்தேன்.

<> <> <>

அன்று என் ஆத்திரத்துக்குப் பாத்திரமாகி, இன்று என்னுடைய அன்புக்குப் பாத்திரமாகிவிட்டக் கண்ணகி அம்மையார் என்ன சொன்னார்களோ என்னமோ, அது எனக்குத் தெரியாது; அடுத்த நாளே பேராசிரியர் என்வீடு தேடி வந்துவிட்டார். அவரை வரவேற்கவும் முடியாமல், வரவேற்காமல் இருக்கவும் முடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று குனிந்து அவர் என்கால்களைப் பற்றி, “என்னை மன்னித்துவிடு நறுமணம் என்னை மன்னித்துவிடு!"என்றார் தம் கண்களைக் குளமாக்கிக்கொண்டு!

அவர் என் கால்களைப் பற்றிய அதே வேகத்தில் நான் கொஞ்சம் பின்வாங்கி நின்று, ‘இதெல்லாம் என்ன வேடிக்கை? எழுந்திருங்கள்!’ என்றேன் ஒரு பக்கம் ஆத்திரத்துடனும், இன்னொரு பக்கம் அனுதாபத்துடனும்.

“வேடிக்கையல்ல நறுமணம், வேதனை’ என்றார் அவர்.

“யாருக்கு? உங்களுக்கா, எனக்கா?’

‘இருவருக்குமேதான்! என்னை உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையே என்று எனக்கு வேதனை; உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று எனக்கு வேதனை!”