பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விந்தன்

நாஸ்திகர்களுக்கு மட்டுமல்ல; ஆஸ்திகர்களுக்குத்தான் எங்கே இருக்கிறது? -

இப்படியெல்லாம் எண்ணத்தை எங்கெல்லாமோ ஒடவிட்டுவிட்டுக் கால் சட்டைக்குப் பதிலாகக் கோட்டை எடுத்து அதன் கைகளில் கால்களை நுழைக்க முயன்று கொண்டிருந்தார் விரிவுரையாளர் ராமமூர்த்தி!

ஆம், விரிவுரையாளர் ராமமூர்த்திதான் அவர் - அதிலும், ஆங்கில விரிவுரையாளர் அல்ல; அன்புக்கும் பண்புக்கும் உறைவிடமான தமிழ் விரிவுரையாளர்!

புகழ் பெற்ற டாக்டர் நெடுமாறனார் எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டி., யை உங்களுக்குத் தெரியுமல்லவா? - இவர், அவருடைய அருமை மாணவர் மட்டுமல்ல; அந்தரங்க மாணவரும்கூட.

அதனால்தான் எந்த ஆண்டு எந்தக் கலாசாலையில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றாரோ, அதே கலாசாலையில், அதே ஆண்டில் அவருக்குத் தமிழ் விரிவுரையாளர் வேலை கிடைத்திருந்தது.

பிறக்கும்போதே பணக்காரராகப் பிறந்துவிட்ட இவருக்கு வேலை பொழுதுபோக்காக இருக்கலாம்; காதலும் கல்யாணமும்கூடப் பொழுதுபோக்கா, என்ன?

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே கையில் காபியுடன் வந்த கல்யாணி, தன் கணவனின் தடுமாற்றத்தைக் கண்டதும் ‘களுக்கென்று சிரித்து விட்டாள்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்றான் அவன்.

‘ஒன்றுமில்லை; எல்லாமே உங்களுக்குத் தலைகீழ் பாடம்தான் போலிருக்கிறது!’ என்றாள் அவள்.