பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விந்தன்

அவ்வளவுதான்; ‘ஐயோ, என் குழந்தை’ என்று அலறியடித்துக் கொண்டு எழுந்தேன் அறைக் கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது

முட்டினேன்; மோதினேன் . ஊஹூம்!

நல்ல வேளையாகக் கடப்பாறையொன்று அந்த அறையில் போட்டிருந்த கட்டிலுக்குக் கீழே வைக்கப் பட்டிருந்தது என் கண்ணில் பட்டது; அதை எடுத்துக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

அழுது கொண்டிருந்தவள் என் பாட்டி - பாட்டியா அவள்? - எமன்; என் குழந்தைக்கென்றே வந்த எமன்

ஆனால்...

அவனைவிட இவளுக்குக் கருணை கொஞ்சம் அதிகம் - ஆம், கருணைதான்!

அவன் கழுத்தைப் பிடித்துத் திருகிக் கொன்று விடவேண்டுமென்று சொன்னால், ‘வேண்டாம்; பால் புகட்டுவது போல் வேறு ஏதாவது புகட்டியே கொன்று விடலாம்!’ என்று வாய் கூசாமல், மனம் கூசாமல் சொல்லிக் கொண்டிருந்தவள் இவள்!

அடி, பாவி உன்னுடைய கையிலா என் குழந்தை? - உயிரோடு வைத்திருக்கிறாயா, இல்லையா?

ஒடிப்போய் அவளுடைய கையிலிருந்த குழந்தையை வாங்கிப் பார்த்தேன்; உயிருடன் தானிருந்தது

ஆனால்...

வீசி எறிந்த பாலாடை, அந்தப் பாலாடையிலிருந்து சிதறிய பால், அந்தப் பாலை நக்கிக் குடித்ததால் தானோ என்னவோ, செத்து விழுந்து கிடந்த ஒரு பூனைக் குட்டி - இதெல்லாம் என்ன?