பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 29

விசாலம் தயங்கினாள்; தயங்கிவிட்டுச் சொன்னாள்; ‘ஐயா எடுத்துக்கொண்டுப் போகச் சொன்னார்; எடுத்துக் கொண்டுப் போனேன். நீங்கள் இங்கேயே இருக்கட்டும் என்கிறீர்கள்; விட்டுவிட்டுப் போகிறேன். இதுதான் வேலைக்காரியின் பிழைப்பு அம்மா, இதுதான் வேலைக்காரியின் பிழைப்பு!” என்று சொல்லிக் கொண்டே, காலையில் ராமமூர்த்தி கொடுத்த பத்து ரூபாயையும் அந்தக் குழந்தைக்குப் பக்கத்திலேயே வைத்து விட்டு அவள் சென்றுவிட்டாள்.

அவளுடைய தலை மறைந்ததும் பெங்களுரிலிருந்த தன் அப்பாவுக்கு அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதினாள் கல்யாணி, அந்தக் கடிதத்தில்;

தேவரீர் அப்பா அவர்களுக்கு, வணக்கம். நலம்; நலம் அறிய அவா. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கடிதம் என்னுடன் பிறக்காமல் பிறந்துவிட்ட ஒரு சகோதரி யினுடையது; அவளுக்காக நான் இந்தக் கடிதத்தை என்றும் காப்பாற்றி வைக்க வேண்டிய நிலையிலிருக் கிறேன். இங்கே இருந்தால் அதற்கு ஏதாவது ஆயத்து நேர்ந்து விடுமோ என்று அச்சமாயிருக்கிறது. எனவே உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்; பத்திரமாக வைத்திருங்கள். இந்தக் கடிதம் பற்றிய விவரம் உங்களுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.

அன்புடன் கல்யாணி.

இரு கடிதங்களையும் இணைத்து ஒட்டி அப்பாவின் முகவரியை எழுதிய பிறகு, அதை எப்படித் தபாலில் சேர்ப்பது என்றப் பிரச்னை எழுந்தது கல்யாணிக்கு.