பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

9



1. திருமணம் ஏன்?

"நிம்மதியாக நான் வாழ விரும்புகிறேன்! என்னைத் தனியாக இருக்க விடுங்கள். எனக்குக் கல்யாணமே வேண்டாம். மீறி என்னை வற்புறுத்தினால், நான் என்ன சொல்வேன், என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது."

ஆத்திரம் பொங்க தன் அம்மாவிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் வாசு. அவனைப் பார்த்து, அழுவதா அல்லது வசை பாடுவதா என்று ஒன்று புரியாமல் வீட்டிற்குள் போகச் சொல்லிச் சைகை செய்தார்.

ஊரிலிருந்து வந்த தன் அண்ணன் உலக நாதரை ஏக்கத்துடன் பார்த்தாள். உலகநாதரும் தன் தங்கையை வீட்டிற்குள் போகச் சொல்லி சைகை செய்தார்.

"எப்படியோ நீங்கள் தான் அவன் மனதை மாற்ற வேண்டும். என் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்" என்று கெஞ்சுவது போல, ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

இதுவரை ஆழ்ந்த சிந்தனையுடன் தரையை பார்த்துக் கொண்டிருந்த வாசு, தலையை நிமிர்த்திப் பார்த்தான். தன் தாய்மாமன் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சிறிது சங்கடப்பட்டான். அந்த நிலைமையை சமாளிக்கவும் முயன்றான் வாசு. மெதுவாகக் கனைத்துக் கொண்டான்.