பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 

தோற்றுப்போவோமோ என்று பயந்துவிடாமல், நன்றாக வாழவேண்டும் என்று ஒரே நம்பிக்கையில், புதிய துணையுடன் சேருகின்ற நிலையைத்தான் திருமணம் என்கிறோம்.

இந்த நினைவும் நம்பிக்கையும் எப்படி ஒருவருக்கு ஏற்படுகிறது? எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்றான் வாசு.

இதுதான் மனித சுபாவம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தமக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். ஊராரோ உற்றரோ, உறவினரோ பெற்றோரோ, அவர்களை வற்புறுத்துவது இல்லை. அவர்கள் உள்ளத்தில் எழுகின்ற உள்ளுணர்வின் ஊக்க எழுச்சியானது, ஒவ்வொரு நினைவிலும் இப்படி ஊடாடிக் கொண்டுதான் இருக்கின்றன.

திருமண உணர்வு ஒருவருக்கு இல்லையென்றால்? வாசுவின் கேள்வி திடீரென்று வந்தது.

அவருக்கு எங்கேயோ ஒரு குறை! இனந்தெரியாத ஒரு கோளாறு என்றுதான் பொருள். பாடாத தேனி, பசிக்காத நல்லவயிறு பார்தததுண்டோ, என்று பாரதிதாசன் பாடியிருக்கிறாரே! வயிறு என்று ஒன்று இருந்தால் பசி என்று ஒன்று வரவேண்டும். பசியே இல்லையென்றால் வயிற்றில் கோளாறு என்றுதானே அர்த்தம். வயிறு பசிப்பது போலத்தான், உள்ளத்தின் உணர்வுகளும் பசியுடன் கிளம்புகின்றன.

உடல் உணர்வுகளுக்காகத்தானே திருமணம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்?

அப்படி இல்லை. திருமணத்தில் உடல் உணர்வு ஒரு பகுதி தான். ஒரு மனிதன் தன் உடலால் உணர்வால்,