பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

81



நடைபெறுகின்ற அனைத்துக்கும் நாமேதான் காரணம் என்பதை குடும்பம் நடத்தும் தம்பதிகள் உணர்ந்து கொள்ளாததே முதற்காரணமாகும்.

திருமணத்திற்கு முன்னர், தனியாக வானம்பாடி போல் அலைந்த ஆண் பெண் இருவருடைய மனதிலும், அபரிதமான ஆசைகள் ஆலோலம் பாடிக்கொண்டிருந்திருக்கும். அவைகள் அனைத்தும் திருமண வாழ்க்கையில் கிடைக்காமற் போகும்பொழுது, நடைமுறையில் வராத பொழுது, இருவருடைய மனதிலும் சற்று ஏமாற்றம் ஏற்படுகிறது. இடைவெளி உண்டாகிறது. எரிச்சலும் பெருமூச்சும் மேலும் மேலும் பெருக, பேரிழப்பு ஏதோ தன் வாழ்வில் நேர்ந்துவிட்டதுபோல பூகம்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகி, பொங்கி வரும் கோபத்திற்கு உள்ளாகிவிடுவதால், கணவன் மனைவி இருவரும் கீரியும் பாம்பும் போல ஆகி விடுகின்றனர்.

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏமாற்றம் ஏற்படுவது சகஜமே! இது பொதுவான அதிருப்திதான். நினைத்ததெல்லாம் வாழ்க்கையில் நடந்து விட்டால், நிறைவேறி விட்டால், பிறகு உலகம் என்பது சர்வசாதாரணமாகிவிடுமே! அதனால் தான், வாழ்க்கையை, "பாதையில்லாத பாதாளலோகம்" என்று சிலர் வருணிப்பார்கள். எது எப்பொழுது நடக்கும் என்று யார் கண்டது?

அறியாமையால் தங்களை அவதிப்படுத்திக் கொண்டதால், கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வரும் நடைமுறை என்றீர்களே? அந்த நடைமுறை என்றால் என்ன பின்பதைக் கூறுங்கள் மாமா?