பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


ஆகவே, கணவனும் மனைவியும் உண்மையுடன் பேசி உறவாடி, அதன்வழியே உண்மையான சூழலின் சிக்கலை உணர்ந்து, அதிலிருந்து மீண்டுவரும் வழியை திட்டமிட்டு வெற்றியுடன் வாழ முயலவேண்டும்.

அவ்வாறு முயற்சிக்காமல், தங்களுடைய வாழ்வு மற்றவர்களுடைய வாழ்வைப் போல் அமையவில்லையே என்ற மனக்குறையுடன் எப்பொழுதும் வாழவே கூடாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் கோபதாபம் உண்டு. கஷ்டநஷடம் உண்டு. ஏற்றத்தாழ்வு உண்டு. வறுமை செழுமை உண்டு. 'சாவே இல்லாத குடும்பத்தில் கடுகு வாங்கி வா! உன் புத்திரனை உயிர்ப்பித்துத் தருகிறேன் என்ற புத்தபிரான் ஒரு பெண்ணுக்கு உண்மை நிலையை உணர்த்தியதாக ஒரு நிகழ்ச்சி உண்டு. அதுபோல், 'வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழியின் உண்மை தெளிந்து, சச்சரவு கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சச்சரவினை பெரிதுபடுத்தாமல், சமாதான முறையிலே, சச்சரவுக்குரிய வழியைச் தீர்த்துக் கொள்வதே அறிவுடையோர்க்கு அழகாகும்.

சச்சரவு வந்தால் எப்படி தீர்த்துக் கொள்வது? குடும்பத்தில், பணம் பற்றி பேச்சு வந்தால்தான், சச்சரவு அதிகம் எழும். குடும்பத்தில், யார் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்வது? என்பதில்தான் பிணக்கும் போராட்டமும்.

கணவனிடம் பணம் இருந்தால் கண்டபடி செலவழித்துவிடுவார் என்றும் கடுகடுக்கும் மனைவியும்; மனைவியிடம் இருந்தால் விருப்பம் போல் ஏதாவது செலவு செய்துவிடுவாள்; தன்னை மதிக்க மாட்டாள் என்று