பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஓர் மகனைப் பெற்று அவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போனாள். சிறு வயது முதலே அவர் காந்திஜியிடமும், அவருடைய கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்று உடையவர்.

இளகிய மனம் படைத்த அவர், தமது பண்ணையில் பணிபுரிகிற அனைவரையும், தம் உறவினர்கள் போல் நேசித்து, அன்பும், ஆதரவும் காட்டி வந்தார். தன்னுடைய ஒரே மகனை, பண்போடு வளர்த்து ஆளாக்கி, அவனை விவசாயத் துறையில் மேற்படிப்புக்காக பட்டணம் அனுப்பி வைத்தார்.

ஏழைகளுக்கு இரங்கும் குணம் படைத்த அவரை, அந்த கிராமத்து மக்கள் அனைவருமே தெய்வம்போல் போற்றி வந்தனர்.

பண்ணையை ஒட்டினாற் போலுள்ள சாலையின் ஆரம்பத்தில்தான், பலவேசம் பிள்ளையினுடைய அழகிய மாடிவீடு இருந்தது. வீட்டிலுள்ள பூஜை அறையைத் தவிர, மற்ற இடங்களிலெல்லாம், நாட்டுக்காகத் தியாகம் செய்த காந்திஜி, நேரு, நேதாஜி, படேல், ராஜாஜி, காமராஜ், ராஜேந்திர பிரசாத், இன்னும் இதுபோன்ற பெரும் தலைவர்களின் படங்களும்; பகத்சிங், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், போன்ற தியாகிகளின் படங்களுமே நிறைந்து காணப்படும்.