உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

309


கைப்பற்றிக்கொள்ள முயற்சி செய்தான். பாண்டியனுக்கு உதவியாக அவன் மகன் ஸ்ரீ மாறனும், சேர அரசனும், நந்தியின் தாயாதி முறையினரான தம்பிமார்களும் இருந்தார்கள். அதே காலத்தில், வடக்கிலிருந்து இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷன் என்பவனும் பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். அவனை முதலாம் அமோகவர்ஷன் என்றும் கூறுவர். அவனுக்கு சர்வன் என்னும் பெயரும் உண்டு.

நந்திவர்மன், அமோகவர்ஷனைக் குறுகோடு என்னும் இடத்தில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரிலே நந்திவர்மன் வெற்றிபெற்றான். தோல்வியடைந்த அமோவர்ஷன், நந்திவர்மனுடன் நட்புக்கொண்டான். இந்த நட்பு இருவருக்கும் நன்மையாக முடிந்தது. நந்தியின் நட்பு அமோகவர்ஷனுக்கும், அவனுடைய நட்பு நந்திவர்மனுக்கும் தேவையாக இருந்தன. ஏனென்றால், அமோகவர்ஷனைக் கீழைச்சாளுக்கிய அரசனும் மேலைக்கங்க அரசனும் எதிர்த்துப் போரிட்டார்கள். நந்திவர்மனைப் பாண்டியனும் அவனுடன் சேர்ந்தவர்களும் எதிர்த்துப் போரிட்டார்கள். இவ்வாறு பல்லவனும் இராஷ்டிரகூட அரசனும் நட்புக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நட்பு உறவை உறுதிப்படுத்த அமோகவர்ஷன் தன் மகளான சங்கை என்பவனை நந்திவர்மனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். மேலும், தன் மகன் தேவன் என்பவனை நந்திவர்மனுக்குத் துணையாகப் பாண்டியனை எதிர்க்க அனுப்பினான்.

குறுகோட்டை

குறுகோடு என்னும் குறுகோட்டையை நந்திவர்மன் வென்றதை, நந்திக் கலம்பகம் என்னும் நூல் கூறுகிறது. தன் யானைப் படையினால் நந்திவர்மன் குறுகோட்டைப் போரை வென்றான்.

“இனவேழம், கோமறுகிற் சீறிக்
குறுகோட்டை வென்றாடும்”

“குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டங்குறி
குறுக்கோட்டையின்மேல்
சென்றஞ்சப் பட்டதெல்லாம்படும்
மாற்றலர் திண்பதியே”