உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


"இகல்வேல் மன்னர், சினக்கரியும் பாய்மாவும்
தெள்ளாற்றுச் சிந்துவித்த செங்கோல்நந்தி”

“மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவாறி
மீண்டான் நந்தி”9

வெள்ளாறு என்னும் இடத்தில் நந்திவர்மன் போர் வென்றதை நந்திக் கலம்பகம் இவ்வாறு கூறுகிறது:

“விரவாத மன்னரெல்லாம் விண்ணேற
வெள்ளாற்று வெகுண்ட கோன்”

“அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
செருவேல் உயர்வு”

"தோள் துணையாக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணல் நந்தி”10

மேலும், நந்திவர்மன் வெறியலூர்ச், பழையாறை என்னும் ஊர்களில் போர் வென்றதை, "வெறியலூர்ச் செருவென்றேன்" என்றும், “படையாறு சாகப் பழையாறு வென்றான்" என்றும் நந்திக் கலம்பகம் கூறுகிறது"11 பாண்டியனுடைய தொண்டி நகரத்தைக் கைப்பற்றியதையும் கலம்பகம் கூறுகிறது.

"தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக
வென்ற தலைமான் வீரதுவசன்
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து
மாய செருவென்ற பாரி”

என்று இவன் வென்ற அரசரைக் கூறுகிறது.12

இராச்சியத்தின் பரப்பு

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பகைவரை வென்று தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் அரசாண்டான். இவனுடைய இராச்சியம், வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவியிருந்தது. வடவேங்கட நாடுடை மன்னர்பிரான் என்றும், வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வேங்கடமலை என்றும், தொண்டையர் கோன் நந்திபல்லவன் என்றும், தொண்டை நாடுடைய கோவே என்றும்,