உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

419


விசாரணைகளை இவன் பொறுப்பேற்று நடத்தாமல் தன் கீழ்ப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டான். அதனால், அவர்கள் தம்முடைய விருப்பம்போல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள். அவர்கள் செய்த பிழைபட்ட தவறான தீர்ப்பு இவ்வரசனுக்குக் கெட்டபெயரை யுண்டாக்கிற்று. இச் செய்தியையும் இளங்கோவடிகளே கூறுகிறார். இதனை விளக்கிக் கூறுவோம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் சேர நாட்டில் இருந்தவன்' பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இந்தக் குட்டுவனைப் பதிற்றுப்பத்து மூன்றாம்பத்தில் பாடியவர் பாலைக் கௌதமனார். அவருக்குக் குட்டுவன் பெருஞ் செல்வங் கொடுத்ததை யறிந்த சோழ நாட்டுப் பார்ப்பான் பராசரன் என்பவன், அவனிடஞ் சென்று வேத பாராயணஞ் செய்து பொன்னையும் மணியையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் (திருத்தண்கால்). என்னும் ஊரில் வந்து அரச மரத்தடியில் இளைப்பாறினான். அப்போது அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவர் அவனிடஞ் சென்றனர். பராசரன் அவ்விளைஞர்களை அழைத்துத் தன்னுடன் வேதம் ஓதும்படி கூறினான். அவ்விளைஞர்களில் தக்கிணன் என்னும் சிறுவன் பிழையில்லாமல் வேதம் ஓதியபடியால், பராசரன் தக்கிணனுக்கு முத்துப் பூணூலையும் பொன் கடகத்தையும் பரிசாகக் கொடுத்தான். பிறகு அவன் தன் சோழ நாட்டுக்குப் போய் விட்டான்.

முத்துப் பூணூலையும் பொற் கடகத்தையும் பரிசாகப் பெற்ற தக்கிணன் என்னும் சிறுவன் அவற்றை அணிந்து கொண்டான். அதனைக் கண்டு பொறாமை கொண்ட அவ்வூர்ப் பார்ப்பனர், தக்கிணனுடைய தந்தையான வார்த்திகன் என்னும் பிராமணன் இந்த நகைகளை எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்தான் என்று ஊர் அதிகாரிகளிடம் கூறினார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அந்த ஊழியர்கள், தீர விசாரியாமல் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். வார்த்திகன் அந்த நகைகளைக் களவாடியிருக்க வேண்டும், அல்லது அவனுக்குப் புதையல் கிடைத்திருக்க வேண்டும். களவு செய்தது குற்றம். புதையல் கிடைத்திருந்தால், அதை அரசாங்கத்தில் சேர்க்காமல் போனது குற்றம் என்று அவர்கள் தீர்ப்புக் கூறினார்கள்.

வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் வருந்தி அழுதாள். அப்போது அவ்வூர் ஐய (கொற்றவை) கோவிலின் கதவு திறவாமல்