பக்கம்:மருதநில மங்கை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8புலவர் கா. கோவிந்தன்


கணவனின் ஒழுக்க உயர்வையும், அவன் ஒழுக்க உயர்வால் ஊர் பெற்றிருக்கும் வளத்தின் சிறப்பையும், தோழி உரைக்க, அப்பெண்ணின் உள்ளம் அவ்வூரின் வளத்தையோ, அவ்வளத்திற்குக் காரணமாய அவன் ஒழுக்க உயர்வையோ எண்ணிப் பார்த்திலது. அவள் கூறிய தும்பியின் செயலுக்கும் தன் கணவன் செயலுக்கும் உள்ள ஒருமைப்பாட்டினையே எண்ணிப் பார்த்தது.

“தும்பி, தேனளித்துப் புரக்கும் தாமரை மலரையும், அம்மலர் விளையும் பொய்கையையும் மறந்தது. அவன் காதற் பேரின்பம் தரும் என்னையும், யான் வாழும் இம் மனையையும் மறந்துளான். அது வயலில் மலரும் நீல மலரைப் பறித்து விற்பார் துணைகொண்டு, அம்மலரைச் சூழ்ந்து திரிகிறது. அவன், பரத்தையர் சேரியில், இன்பம் நுகரலாம் இளமைப் பருவம் உடையாரைப் பாணர் துணையால் பெற்று, அவர் இன்பம் நுகர்ந்து மகிழ்கிறான். அது, பகற்காலத்தில், யானையின் மதநீராம் விருந்துண்டு கிடக்கிறது. அவன், பகற் காலத்தில் சேரிப் பரத்தையர் மனையிற் கிடந்து, அவர் நலன் உண்டு மகிழ்கிறான். மாலை வந்துற்றதும், அது முல்லை மலரை மொய்த்து மகிழ்கிறது. அவன், இரவில் இற்பரத்தையின் மனையில் இன்பம் நுகர்ந்து கிடக்கிறான். இருவர் ஒழுக்கத்திற்கும் உள்ள ஒற்றுமைதான் என்னே!” என எண்ணி ஏங்கிற்று அவள் உள்ளம்.

அந்நினைவு மிகுதியால் வருந்தித் துயர் உற்றாள். உறக்கம் அற்று இரவைக் கழித்தாள். விடியற்காலம், இருள் நீங்கி ஒளிபரவாக் காலம். வாயிற்கண் யாரோவந்து நிற்கும் அரவம் கேட்டுச் சென்று நோக்கினாள். ஆங்கு அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/10&oldid=1129304" இலிருந்து மீள்விக்கப்பட்டது