பக்கம்:மருதநில மங்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை9


நின்று கொண்டிருந்தான். அவன் ஒழுக்கக் கேட்டால் வருந்தியிருப்பாள் உள்ளத்தை, ஆங்கு நிற்கும் அவன் தோற்றம் பெரிதும் வருத்திற்று. பரத்தையர் விற்ற மாலையை வாங்கி அவரை வதுவை மணம் கொண்டதால் எழும் மணம் அவன் மேனியினின்றும் இன்னமும் நீங்க வில்லை. புணர்ச்சி மயக்கத்தால், தன் மாலையைப் பரத்தை அணிந்து கொள்ள, அவள் மாலையைத் தான் அணிந்து கொண்ட அத் தோற்றத்தோடே வந்திருந்தான். பரத்தையரின் தோளைத் தழுவிய காலத்தில், அவர் அணிகள் அழுத்திப் பண்ணிய வடுக்கள் அவன் ஆகத்தில் அழுந்தத் தோன்றின. அவனைப் பிரிந்து, அவன் அன்பை இழந்து, அவன் ஒழுக்கக் குறைபாடு கண்டு, ஊரார் உரைக்கும் அலர் கேட்டு வருந்தி நிற்கும் தன் முன், அவ்வொழுக்கக் கேட்டினை உண்மையென நிலைநாட்டி உணர்த்தும் உருவோடு வந்து நிற்கும் அவனை, நேரிற் காண நேரவே பெரிதும் வருந்தினாள். வந்தவனுக்கு வழி விடவும் மறுத்தது அவள் உள்ளம். தெருவை நோக்கினாள். அவன் ஏறிவந்த தேர், குதிரைகள் பூட்டவிழ்த்துவிடப் பெறாமல், பூட்டியவாறே நின்றிருந்தது. அத்தேர் அருகே, தேரை விரைந்தோட்டிச் செல்லும் கருத்தோடு நிற்கும் தேர்ப் பாகனையும் கண்டாள். வந்தவன், பரத்தையர் ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தன்னோடு வாழும் அறம் பிறழா அன்பு வாழ்க்கையை விரும்பி வந்தான்ல்லன். வேறு எங்கோ, வேறு எவளோ ஒரு பரத்தையின் மனை நோக்கிச் செல்பவன், இடைவழியில் சிறிதே இவண் வந்து நின்றுளான் என உணர்ந்தாள். அவன் பிழையை மறந்து ஏற்றுக் கொள்ள எண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/11&oldid=1129360" இலிருந்து மீள்விக்கப்பட்டது