பக்கம்:மருதநில மங்கை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20புலவர் கா. கோவிந்தன்


அமைச்சர் அறிவுடைப் பெருமக்களாய் அமையவே, அவன் அவ்வாசையால் அழிந்திலன். அவ்வாசையால் அவனுக்கும், அவன் நாட்டு மக்களுக்கும் உளதாகும் கேட்டினை எடுத்துக் காட்டி, அரிய அறிவுரை வழங்கி, அவனை அவ்வழிவுப் பாதையினின்றும் காத்தனர் அமைச்சர். அவர் துணையால், இளைஞன் அழியாப் பெருவாழ்வு பெற்று வாழ்ந்தான்.

ஒருவர் இருந்து ஆளுதற்கு வேண்டுமளவு, அவன் நாடு பரந்து கிடந்தது. அவன் நாட்டை அடுத்துள்ள நாடுகளை அழிக்கும் ஆற்றல் அவன் நாட்டிற்கு இருந்ததேயல்லது, அவன் நாட்டை அழிக்கும் ஆற்றல் அந்நாடுகளுக்கு இல்லை. அதனால், நாட்டைக் காக்க வேண்டுமே என்ற கவலை அவனுக்கு இல்லை. மேலும் நாட்டு மக்கள், புலவர் கூறும் பொருளுரை கேட்டுப் பண்பட்டவராதலின், நாட்டில் அமைதிக்கு ஊறு இல்லையாதலின், நாட்டாட்சியில் கருத்தைச் செலுத்த வேண்டிய நிலையும் அவனுக்கு இல்லையாயிற்று. அதனால், அவன் உள்ளம் ஆடல் பாடல்களில் சென்றது. அவ்வேட்கை மிகுதியால் மனைவியையும் ஒரு சிறிது மறந்தான். ஊரில் உள்ள பரத்தையர் வீடுதோறும் புகுந்து, அவர் ஆடலும் பாடலும் அழகும் கண்டு களித்து வாழத் தொடங்கினான். இன்று ஒரு பரத்தை வீடு, நாளைக்கு ஒரு பரத்தை வீடு என, நாள்தோறும் புதுப்புதுப் பரத்தையரைப் பெற்றுச் சிற்றின்ப வாழ்வில் அறிவைப் பறிகொடுத்து அகமகிழ்ந்து கிடந்தான். இளைஞன் பரத்தையர் ஒழுக்கத்திற்கு உற்ற துணை புரிந்தனர் அவன்பால் பரிசில் பெற்றுப் பிழைக்கும் பாணனும், தேர்ப்பாகனும், ஆடல் பாடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/22&oldid=1129379" இலிருந்து மீள்விக்கப்பட்டது