பக்கம்:மருதநில மங்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை21


வல்லளாய் அழகிற் சிறந்து விளங்குவாள் வாழும் மனையறிந்து வருவான் பாணன். அவள் மனைக்கு, இளைஞனை அழைத்துச் சென்று விடுவான் தேர்ப்பாகன்.

ஒரு நாள் கூடி மகிழ்ந்த பரத்தையை, மறுநாள் மறந்து விடுத்துப் புதியாள் ஒருத்தியின் பின்சென்று வாழ்வதில் பேரின்பம் கண்டான் இளைஞன். அதனால், நேற்று அவனைப் பெற்று மகிழ்ந்தவள். இன்று அவன், வேறு ஒருத்தியைத் தேடிப் போய்விட்டான் என்பது அறிந்து, “நாடாளும் இவ்விளைஞன் நம்புதற்குரிய நல்லனல்லன்!” எனக் கூறிப் பழிப்பள். அவன், வேறு ஒரு பரத்தை வீடு சென்று வாழ்கிறான் என்பதை அறியாத பரத்தை, அவன் அரண்மனை சென்று வாழ்கின்றனனோ எனும் நினைவால், ஆங்குச் சென்று, அவனை வினாவுதலும் உண்டு. இவ்வாறு வருந்தினர் அப்பரத்தையர். ஆடுகள் தழை உண்ணுமாறு, இடையன் வெட்டிச் சாய்த்த மரக்கிளை, முழுதும் வெட்டி வேறாக்கப் பெறாமையால் அறவே அழிந்து போகாமலும், வெட்டுண்டமையால் புதிய தளிர் விட்டுத் தழைக்காமலும் கிடந்து அழிவது போல், இளைஞனை முழுதும் தமக்கே உரியனாய்ப் பெற்று மகிழ்வதோ, அறவே மறப்பதோ செய்யமாட்டாது, பரத்தையர் வருந்திக் கிடந்தனர். இவ்வாறு, அவனோடு தொடர்புற்று வாழ்ந்த பரத்தையர் மிகப் பலராவர். அவரை எண்ணிக் கணக்கிடல் இயலாது. இவ்வூர் முழுவதும் அவர்களே எனக் கூறுமாறு, ஒர் ஊரில் அவர்களை மட்டுமே குடியேற்றி வாழ வைக்கலாம். அவன் உறவாடிய பரத்தையர் கூட்டம் அத்துணைப் பெரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/23&oldid=1129380" இலிருந்து மீள்விக்கப்பட்டது