பக்கம்:மருதநில மங்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22புலவர் கா. கோவிந்தன்


இளைஞன் பேராண்மை கண்டு பாராட்டிய ஊரார், அவன் ஆட்சி நலம் கண்டு நாவாரப் புகழ்ந்த அந்நாட்டு மக்கள், அவன் மேற்கொண்ட பரத்தையர் ஒழுக்கம் அறிந்து பழிக்கத் தலைப்பட்டனர். கணவன் ஒழுக்கக் கேட்டினையும், அக் கேடறிந்து ஊரார் உரைக்கும் பழி யுரைகளையும் அறிந்து வருந்தினாள் அவன் மனைவி. அவனைப் பிரியாதிருந்து பேரின்பம் நுகர்தற்கில்லையே என்ற ஏக்கத்திலும், அவன் ஒழுக்கக் கேட்டால் உண்டாம் இழிவு பெரிதாயிற்று. அக் கவலையால், அழகும் நலமும் அவளை விட்டு அகன்றன. மகிழ்ச்சி இழந்து மனங்குன்றிக் கிடந்தாள்.

அந்நிலையில் அரண்மனையில் ஒரு விழாக் கொண்டாடப் பெற்றது. விழாக் கருதியும் அரசன் அரண்மனைக்கு மீண்டானல்லன். அவன் இல்லாமலே விழாக் கொண்டாடப் பெற்றது. அவ் விழாப் பற்றிய நினைவு மிகுதியால், அரசமாதேவி தன் கவலையை ஒரு சிறிது மறந்திருந்தாள். ஆனால், அவ்வமைதி நெடிது நிற்கவில்லை. விழா நிகழுங்கால், அரச வீதி வழியே சென்று கொண்டிருத்த பாணன், அரண்மனை விழாவைக் கண்டான். விழா நிகழ் காலமாதலின் அரசன் அரண்மனைக்கண் இருப்பன் என எண்ணினான். உடனே உள்ளே புகுந்து நோக்கினான். ஆனால், ஆங்கு அரசனைக் கண்டிலன். அதனால் அரசியாரை அணுகி, “அரசர் எங்கே?” என்றுவினாவினான். பாணன் வினா, அரசியார் மறந்திருந்த, அரசன் ஒழுக்கக் கேட்டினை நினைப்பூட்டி விட்டது. அந்நினைவு மிகுதியால் வருத்தம் மிக்கு வாடிக் கிடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/24&oldid=1129381" இலிருந்து மீள்விக்கப்பட்டது