பக்கம்:மருதநில மங்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை23


அந் நிலையில் அரசனும் வந்து சேர்ந்தான். அவனைக் காணவே, அதுகாறும் அடங்கியிருந்த அவள் காதல் உணர்வு துளிர்க்கத் தலைப்பட்டது. ஆயினும், அவன் ஒழுக்கக் கேடு அவள் உள்ளத்தை வாட்டிற்று. மனைவி, கணவன் தரும் இன்பத்தால், மகிழ மட்டும் வந்தவளல்லள். அவன் தவறியவிடத்து, அத் தவறினை எடுத்துக் காட்டித் திருத்தவும் கடமைப்பட்டவள் என்பதை உணர்ந்தவளாதலின், அவனுக்கு அறிவுரைக்க விரும்பினாள். விரும்பியவள், தான் அறிவுரைக்க முற்படுவதால் கணவன் மனத்தை நோகச் செய்து விடுதல் கூடாதே என்றும் எண்ணினாள். அதனால், “தனக்குரிய நாடு சிறிதேயாயினும், அதை ஊறு நேராவாறு காக்கும் கடமையை மறந்து, பிற நாடுகள் மீது ஆசை கொண்டு போவது அறநெறியாகாது. அஃது அழிவுப் பாதையாம் என்பதை ஆன்றோர் உணர்த்த உணர்ந்த உரவோன் நீ!” என வெளிப்படக் கூறிப் பாராட்டி வரவேற்பாள் போல் வரவேற்று, “அத்தகைய பேரறிவு வாய்ந்த நீ, மணங் கொண்ட மனைவியை மறந்து, பரத்தையர் நலம் நாடிச் செல்லுதல் பழியாம். உள்ள மனைவியை விடுத்து, ஊர்ப் பெண்களோடு திரிதல் உயர்ந்தோர்க்குரிய ஒழுக்கமன்று என்பதை உணராதது ஏனோ?” என்பதைக் குறிப்பால் கூறி அறிவுறுத்தினாள்.

அவ்வாறு கூறி வரவேற்றவள், அவள் பாராட்டுரை கேட்டு, அதன் வழியே அவள் உள்ளம் உணர்த்தும் உயர்ந்த அறிவுரை உணர்ந்து உணர்விழந்து நிற்பானை உள்ளே அழைத்துச் சென்றாள். அவனை அணுகி நின்று, “ஐய! நீ என்னை மறந்து வாழ்ந்தாய். பரத்தையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/25&oldid=1129382" இலிருந்து மீள்விக்கப்பட்டது