பக்கம்:மருதநில மங்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை35


வெளிப்பட்ட சேவல், அதன் எதிரே வந்தது. தன் காதற் சேவல் தன்னை மறந்து விடாது, தன்னைத் தேடிவரக் காணவே, அதன் அறியாமை அதற்குப் பெருநாணைத் தந்தது. நாணிய அப்பேடு, நெருங்க மலர்ந்து நிற்கும் தாமரை மலர்களின் இடையே புகுந்து தன்னை மறைத்துக் கொண்டது. இத்தகைய அழகிய காட்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் நிலைக்களமாய் வளம் மிக்க நாட்டில் காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்ந்து வந்தனர்.

காதல் எனும் காற்று உந்த, இன்பத்திற்கு இருப்பிடமாய், அமைதியாகச் சென்று கொண்டிருந்த அவர் வாழ்க்கைப் படகு, பரத்தையர் ஒழுக்கம் எனும் புயலால் தாக்குண்டு தன்நெறி பிறழ்ந்தது. இளைஞன், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு, அப் பரத்தையர் சேரி புகுந்து, வாழத் தொடங்கினான்.

கணவன்மார் பிரிவு, பொதுவாக, மகளிர் அனைவர்க்கும் பெருந்துயர் தரும். அதிலும், கணவன் பொருள் கருதியோ, போர் குறித்தோ பிரிந்திலன். பரத்தையர் உறவு நாடிப் பிரிந்தான்் என அறிந்தால், அப் பிரிவை அவர் தாங்கிக் கொள்ளார். அப் பிரிவுத் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்தல், அம் மகளிரால் இயலாது. அதனால், கணவன் பரத்தையர் மனை புகுந்து வாழ்கிறான் என்ற செய்தி கேட்டு அவன் மனைவி கலங்கினாள். கலக்க மிகுதியால், அவள் நலன் அவளை விட்டு மறைந்தது. அவள் கண்கள் உறக்கம் கொள்ள மறுத்தன. உறக்கம் இழந்து, உள்ளத் துயர் மிகுந்து வருந்திய நாட்கள் எண்ணற்றன கழிந்தன. சோர்வு மிகுதியால், உடல் ஒரோவழி படுக்கையிற் சாய, அதனால் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/37&oldid=1129452" இலிருந்து மீள்விக்கப்பட்டது