பக்கம்:மருதநில மங்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை41


கணவருக்கு வேண்டிய மகளிர், அவர் விரும்பும் மகளிர், தங்களை யல்லது பிறர் எவரும் இலர். அத்தகையார் எவரையும் நான் தேரேற்றிக் கொணர்ந்தறியேன். எனக்கு வாழ்வளிக்கும் இத் தேர்மீது ஆணை !” என்று கூறி அஞ்சி அகன்றான். பிறிதொரு நாள் பாணனைப் பார்த்தாள். அவனை அழைத்துத் தன் கணவனுக்குத் துணை போகும் அவன் கொடுமையைக் கண்டித்தாள். அவள் சினம் கண்டு நடுங்கிய அப் பாணன், “அம்மையே! அவர் பரத்தையர் உறவு கொண்டிருப்பதை நான் அறியேன். அவர் உறவு கொண்ட பரத்தை யார், அவர் செல்லும் இடம் எது என்பதும் எனக்குத் தெரியாது. தெரிந்தால் அதைத் தங்கள் பால் அறிவியாதிரேன். தங்களுக்கு மறைத்துக் கொடுமை புரியும் சிறுமைக் குணம் என்பால் இல்லை. இது உண்மை. என் யாழ்மீது ஆணை !” என்று கூறி அகன்றான். ஒரு நாள், கணவனின் ஆருயிர் நண்பன் அவனைத் தேடி அவன் மனைக்கு வந்தான். ஆங்கு அவனைக் கண்டிலன். வந்த அந் நண்பன்பால், அவள் கணவன் மேற்கொண்டிருக்கும் ஒழுக்கக் கேட்டைக் கூறி வருந்தினாள். ஆனால், வந்த நண்பனோ, தன் தோழனின் தவறுகளைப் பொருட்படுத்தாது, அவன்பால் காணலாம் அருங்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் பாராட்டி, அத்தகையான் தவறு செய்யான் என்று கூறி, அவள் வாயடைத்துச் சென்றான்.

தேர்ப் பாகனும், யாழ்ப் பாணனும், ஆருயிர் நண்பனும், கணவனுக்கு உற்றவராகவே பேசக் கண்டு, அவள் தன் துயர் தீர்ப்பாரை அறியாது கலங்கினாள். “அக்கலக்கம் தீர, ஒருநாள் இயற்கைக் காட்சிகளைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/43&oldid=1129469" இலிருந்து மீள்விக்கப்பட்டது