பக்கம்:மருதநில மங்கை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை43
 

அதன்மீது படரவே, படிந்திருந்த பனிநீர் சிறுசிறு துளிகளாகச் சிந்திச் சொட்ட, மெல்ல மெல்ல மலரும் அக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாள். தன்னைப் பற்றிய நினைவு மீண்டும் தலை தூக்கிற்று. ‘என்னைப் பிரிந்து கொடுமை செய்யும் கணவன், என்பால் வந்து, என்பிழை பொறுத்து ஆட்கொள்க!' என்று கூறி என் முன் தோன்றானா? அவனைக் கண்டு என் அகமும் முகமும் ஒருங்கே மலர, என் கண்களில் தேங்கிக் கிடக்கும் நீர் கீழே துளிர்த்து வீழ்ந்து போக, என் முகமும் இம்மலர்போல் மகிழ்ச்சியால் மலராதா?' என்ற எண்ணம் எழ ஏங்கினாள்.

அவ்வெண்ணம் அலைக்க எழுந்து வீட்டிற்கு வந்தாள். அவள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கணவனும் வந்து சேர்ந்தான். புணர்ச்சிக் காலத்தில், பரத்தையர், தம் பல்லாலும் நகத்தாலும் பண்ணிய புண்கள், அவன் மேனியில் அவ்வாறே தெரிந்தன. அவற்றை மறைக்க வேண்டும் எனும் மான வுணர்வும் அவனுக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. அம்மட்டோ! அவன் கழுத்தை நோக்கினாள். புணர்ச்சியின்போது, பரத்தையர் அவனைத் தம் கைகளால் வளைத்து அனைத்துக் கொள்ள, அந் நிலையில் அவர் கையில் அணிந்த தொடிகள் அழுந்தியதனால் ஏற்பட்ட தழும்புகள், அவன் கழுத்தில் எடுப்பாக, எல்லோருக்கும் எளிதில் தெரியுமாறு இருப்பதைக் கண்டாள். அவன் அவளை அணுகினான். அவன் மார்பு புதுமணம் வீசிற்று. அது, அவன் உறவு கொண்ட பரத்தையின் மணம் நாறும் கூந்தலில் கிடந்து உறங்கியதால் உண்டான மணம், என்பதை அறிந்தாள் ஆறாச் சினம் கொண்டாள்.