பக்கம்:மருதநில மங்கை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை51
 

செய்ய, நானும் மகிழ்ந்து வாழ்ந்தேன். இன்று உன் ஒழுக்கக் கேடு உணர்ந்து உள்ளம் நோகிறேன். இவ்வாறு நான் வருந்த, நீ செய்த தவறுகளை எண்ணிப் பாராது, உன்னைக் கண்டவுடனே, அவற்றை யெல்லாம் மறந்து, உன்னை வரவேற்க வேண்டும் என்று விரும்புகின்றாய். அன்ப! அவ்வாறு மானம் இழந்து, மனத் துயர் மிக்கு, உன்னை வரவேற்று வாழ்வதினும், உன் பிரிவால் நான் அடையும் துயரம் பெரிதன்றே. அவ்வாறு உன்னை வரவேற்று வாழ்வதினும் அந் நோய் பொறுத்து வாழ்தல் இழிவுடைத்தும் அன்று. ஆகவே, அன்ப! உன்னைப் பிரிந்தும் உயிர் கொண்டு வாழும் வல்லமை உடையேன் நான். ஆகவே, என்னைக் கைவிட்டு, உன் உள்ளம் விரும்பும் அப் பரத்தையர்பால் சென்று, அகம் மகிழ்ந்து வாழ்க!" எனக் கூறி வாயில் அடைத்துச் சென்றாள்.

"இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்,
துணைபுணர் அன்னத்தின் தூவிமெல் அணை அசைஇச்.
சேடுஇயல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி
ஊடும் மென்சிறுகிளி உணர்ப்பவள் முகம்போலப்,

புதுநீர புதல்ஒற்றப் புணர்திரைப் பிதிர்மல்க 5
மதிநோக்கி அலர்வித்த ஆம்பல் வான்மலர் நண்ணிக்
கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின்
வடிதீண்ட வாய்விடுஉம் வயல்அணி நல்ஊர!

கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும், யாம்அழப்
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ? 10
பேணான் என்று உடன்றவர் உகிர்செய்த வடுவினான்,
மேனாள் நின்தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை,