பக்கம்:மருதநில மங்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54புலவர் கா. கோவிந்தன்


நினைப்பூட்ட நின்று வருந்தினாள். நீர்த்துறை பரத்தையர் சேரியாகவும், அத்துறை அழகு பெற மலர்ந்த பகன்றைப் பூக்கள், அச்சேரிக்கு அழகு தரும் இளம் பரத்தையராகவும், அம் மலரை அடுத்து இருந்த தாமரை அரும்பு, அப் பரத்தையரோடு தொடர்பு கொண்டு வாழும் தன் கணவனாகவும் காட்சி அளித்தன. அம்மட்டோ! தாமரை மலர், கள்ளுண்ணல் தீதென அறிந்தும், அதை உண்டு களிப்பவள் முகம்போல் மலர்வது, பரத்தையர் ஒழுக்கம் பழியுடைத்து என அறிந்தும், அவர்பால் இன்பம் நுகர்ந்து மகிழும் கணவன் செயலை நினைவூட்டிற்று. அதனால் கலங்கி, அங்கு நில்லாது வீடடைந்தாள்.

அந்நிலையில், பரத்தை வீடு சென்றிருந்த கணவனும் வந்து சேர்ந்தான். வந்தவன் உள்ளே வாராவாறு வழியடைத்துக் கொண்டாள். சினந்து நிற்கும் அவள் நிலை கண்டு அவன் நடுங்கினான். அவளைத் தேற்றும் வழியறியாது விழித்தான். இறுதியில், அவளைப் பணிந்து நின்று, “பெண்ணே ! நீ கருதுமாறு, நான் பழியுடையேன் அல்லேன்! நீ சினக்குமாறு செய்த குற்றம் எதையும் நான் அறியேன்!” எனக் கூறி நின்றான்.

கணவன் ஒழுக்கக் கேட்டால் உள்ளம் நொந்து இருப்பவள், அவன் பொய்யுரைக்கக் கேட்டுப் பெரிதும் சினம் கொண்டாள். கண்கள் சிவப்பேற, அவனை நோக்கினாள். அவன் அணிந்துள்ள தலைமாலை, அவன் விரும்பிப் புணர்ந்த இளம்பரத்தையரின் மாலை விளங்கும் மார்பை ஆரத் தழுவிக் கொண்டமையாற் கசங்கி, நிறங் கெட்டுத் தோன்றுவதைக் கண்டாள். மேலும், அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/56&oldid=1129487" இலிருந்து மீள்விக்கப்பட்டது