பக்கம்:மருதநில மங்கை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64புலவர் கா. கோவிந்தன்


அச் செல்வத்திற்குக் கணவன், அவன் தந்தை பெயரையே இட்டுப் போற்றி வளர்த்தான்.

இந் நிலையில், அவனுக்குப் பரத்தையர் தொடர்பு எவ்வாறோ உண்டாயிற்று. நாள் ஆக ஆக, அவன் அவ்வொழுக்கத்தில் ஆழ்ந்து போனான். நாள்தோறும் ஒரு புதுப் பரத்தையை மணந்து மகிழ்ந்து வாழத் தொடங்கினான். கணவன் இவ்வாறு தன்னையும், தன் மகனையும், தங்கள் மனையறத்தையும் மறந்து திரியவும், அவள் அவன் மீது சினம் கொண்டாளல்லள். பரத்தை வீடு சென்று வாழ்பவன், இடையிடையே, ஒரு திங்களுக்கு ஒருமுறை, பல திங்களுக்கு ஒருமுறை எனத் தன் மனைக்கு வருவன். அவ்வாறு வருவானை அவள் ஏதும் கூறுவது இல்லை. மாறாக மகிழ்ந்து வரவேற்று வழிபடுவள்.

இதைக் கண்டாள் அவள் தோழி. அவளுக்கு அவன் செயலின் கொடுமை புலப்பட்டது. ‘அவன் இத்துணைக் கொடியனாகவும், இவள் அவனை வெறுத்திலளே, என்னே இவள் மடமை!’ என எண்ணி வருந்தினாள். வருந்தியதோடு நில்லாது, “அவ்வாறு வாய்மூடிக் கிடப்பது உன் வாழ்வைக் கெடுக்கும். அவன் கொடுமையைக் காட்டி அவனை மறுத்தல் வேண்டும். அவன் ஒழுக்கக் கேட்டை, அவனுக்கு வேண்டியவர்.பால் உரைத்தல் வேண்டும்!” என உணர்த்தினாள். கணவன் செய்யும் தவறுகளை அவன் தாய் தந்தையர்க்கு அறிவிப்பதில் இழுக்கில்லை. அது அவள் கடமையுமாகும். இயற்கையோடியைந்த இனிய அறநெறியுமாம் என்பதை அவளுக்கு அறிவிக்க விரும்பிய தோழி, “பெண்ணே உன் கணவனுக்குரிய நெய்தல் நில நாட்டில் வாழும் ஆடும் பருவத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/66&oldid=1129508" இலிருந்து மீள்விக்கப்பட்டது