பக்கம்:மருதநில மங்கை.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66புலவர் கா. கோவிந்தன்
 

ஒதுக்க முடியவில்லையே! என் இல்வாழ்க்கை குறுக்கிடுகிறதே! என் செய்வேன்? ஒருநாள் பரத்தையர் சேரியினின்றும் நம் வீட்டிற்கு வந்தான். வந்தவனை, வாயிற்கண் நிறுத்தி வைத்து, "இவ்வாறு, மணமகன் போல் கோலம் கொண்டு மகளிர் பின் திரியும் உன்பால் மக்கட்டன்மை சிறிதும் இல்லையோ? இவ்வாறு திரியும் உன் உள்ளக் கருத்துத்தான் யாதோ? என்று கூறி வெகுண்டேன். பின்னர் வந்தான்பால் வாய் திறந்து எதுவும் பேசாது; உள்ளே வந்து விட்டேன். ஆனால் என்ன செய்வேன்? வந்தவன் தனித்து வந்திலன். விருந்தினர் சிலரையும் தேரேற்றிக் கொண்டு வந்திருந்தான். அவர்களைப் பார்த்து விட்டேன். கடமை கண்முன் நின்றது. என் ஊடலுணர்வு எங்கோ சென்று மறைந்தது. விருந்தினர் முன், அவனைக் கண்டித்ததற்கு மனம் நொந்தேன். அவரை வரவேற்க அவன் துணை வேண்டினேன். அவன் கொடுமை மறந்து அவனோடு குலாவினேன்.

"மற்றொரு நாள் அவன் வந்தான். அவன் மாலை வாடியிருப்பதைக் கண்டு, இவ்வாறு பரத்தையர் பின் திரிந்து, அவரால் உன் பேரழகு சிதைய வந்து என் முன் நிற்காதே! என்று ஊடினேன். என் கோபம் கண்டு கலங்கிய அவன், என் கோபத்தைத் தணிக்க வேண்டிப், 'பரத்தை மகளிர் எவரையும் நான் இதுகாறும் பார்த்ததும் இல்லை!' எனத் துணிந்து ஒரு பொய் கூறினான். பொய் கூறியதோடு நில்லாது, அதை உறுதி செய்ய ஆணையும் வைத்தான். தோழி! அவன் கூறியது பொய் என்பதை அறிவேன். பொய் பொல்லாங்கு தருவது. அதுவே ஒருவர் வாழ்வைப் பாழாக்கும். அப்பொய் உரைப்பதற்கு மேலும், பொய்ச் சூளும் கூறின் கூறுவார் வாழ்வரோ? தோழி!