பக்கம்:மருதநில மங்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74புலவர் கா. கோவிந்தன்


எழுந்து விட்டது. இனியும் அவ்வாறே விட்டால், அதனால் அவர்க்கு ஏதேனும் சேதம் உண்டாயின் என்னாவது என எண்ணிக் கலங்கினாள். உண்மையறிந்து உற்ற துணைபுரிய விரும்பினாள். உடனே, தனித்திருக்கும் அப்பெண்ணின்பால் சென்று, “தோழி! நாள்தோறும், நாம் ஆடும் இடத்திற்குத் தவறாது வந்து போகும் அவ்விளைஞனையும், உன்னையும் தொடர்பு படுத்தி, இவ்வூரார் ஏதேதோ கூறுகின்றனர். அவர் கூறுவதில் ஏதேனும் உண்மை உளதோ? அவர் கூறுவது போல், நீ அவனோடு உறவு கொண்டிருப்பது உண்மைதானோ?” என்று கேட்டாள்.

அப்பெண், தன் காதல் ஒழுக்கத்தைத் தோழிக்குத் தானே உணர்த்த விரும்பினாள். ஆனால், நாணம் தடுத்தமையால் உணர்த்திலள். இப்பொழுது அத்தோழி, தானே அறிந்து வினவுகிறாள். உண்மையை ஒப்புக்கொள் என்றது அவள் உள்ளம். ஆனால் அவள் பெண்மை, அதை ஒப்புக் கொள்ளத் தயங்கிற்று. அதனால், தோழியை நோக்கித், “தோழி! ஒரு நாள், அவ்விளைஞன் பஞ்சாய்க் கோரை பறித்துத் தந்தான். மற்றொரு நாள், மலர் பறித்துக் கொடுத்தான். பிறிதொரு நாள், என் தோளில் தொய்யில் வரைந்தான். அவன் செய்தன. இவ்வளவே. இதை வைத்துக் கொண்டு, இவ்வூரில் வாழும் வாயாடிப் பெண்கள் சிலர், வம்பு பேசுகின்றனர். என்னோடு பழகி, என் இயல்பு அறிந்த நீ, அவர் கூறுவதில் உண்மையில்லை என்பதை உணர்ந்து, அவரைக் கடிவதை விடுத்து, என்பால் வந்து, அதில் உண்மை யிருப்பது போல் வினவுகின்றனை. தோழியர் பலர் என்னை இடைவிடாது சூழ்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/76&oldid=1129842" இலிருந்து மீள்விக்கப்பட்டது