பக்கம்:மருதநில மங்கை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6புலவர் கா. கோவிந்தன்


கணவன் பிரிவால் கலங்கினாள் அவன் மனைவி, அவன் அன்பைப் பெறமாட்டா வருத்தம் ஒருபால். தனக்கே உரியது என உரிமை பாராட்டிய அவன் அன்பு, பிறிதொரு பெண்ணிற்குக் கிடைப்பதால் உண்டாம் பெருந்துயர் பிறிதொருபால். இவையனைத்திற்கும் மேலாகக் கணவன் ஒழுக்கத்தில் தவறியதால் உண்டாம் இழுக்கம்- அனைத்தும் ஒன்றுகூடி அவளைத் துன்புறுத்தின. மனத் துயர் அவளை மீளா நோய்க்கு ஆளாக்கிற்று. உள்ள நோயால் உடல் தளர்ந்தது. அந்நிலையில், கணவன் பரத்தை யொருத்தியின் பின் திரிவதையும், அவளோடு சென்று புனலாடியும், துணங்கை ஆடியும் களித்துக் காலங்கழிப்பதையும் கண்ட ஊரார், அவள்பால் சென்று, ஒழுக்கத்தில் இழுக்கிய அவனை அலர் கூறிப் பழித்தனர். கணவன் பிரிவால் கலங்கியிருக்கும் அவள் உள்ளம், ஊரார் உரைக்கும் அலரால், மேலும் வருந்திற்று. அந்நிலையில் வாழ்ந்திருந்தாள் அவள்.

அப் பெண்ணின் துயர் கண்டாள், அயல் வீட்டில் வாழும் அவள் தோழி. அவளுக்கு ஆறுதல் உரைக்க விரும்பினாள். அவள் வீட்டிற்குச் சென்று, அவளை அணுகித், “தோழி! உன் கணவன் நீ கருதுமாறு தீயனல்லன். அவன் தீயனல்லன் என்பதை, அவன் வாழும் அவனுக்குரிய இவ்வூரின் வளமே அறிக்கும். அவன் தீயனாயின், அவனைப் பெற்ற இவ்வூர், இவ்வாறு நலத்தால் சிறந்து விளங்காது. இவ்வூரின் வளத்தை, அதிலும், இவ்வூரின் நீர் வளத்தை என்னெனப் புகழ்வேன்! இவ்வூர் வயல்கள், வரப்பளவும் உயர்ந்த நீரால் நிறைந்து, கருநீல மலர்கள் மணந்து மணம் கமழும். மலர் விற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/8&oldid=1129298" இலிருந்து மீள்விக்கப்பட்டது