பக்கம்:மருதநில மங்கை.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை79
 

விட்டுக் கிடந்தாள். கணவன் பிரிவால் உண்டான வருத்தத்தோடு, ஊரார் உரைக்கும் பழிச்சொல், அவன் பரத்தையர் உரைக்கும் கொடுமை, பாணன் வருகை ஆகியவற்றால் உண்டாம் வருத்தமும் ஒன்று கூடி அவளைப் பெரிதும் வருத்தின. அவ்வாறு வருந்தி யிருப்பாள் முன், ஒரு நாள், அவள் கணவன் வந்து நின்றான். வந்து வாளா இராது, "பெண்ணே! என் பிரிவால் நீ பெரிதும் வருந்தினை போலும் ! கவலையால் உன் மேனி அழகு இழந்து விட்டதே! உன் கண்கள் ஒளி இழந்து விட்டனவே! உறக்கத்தை மறந்தாயோ! கூந்தலை மாசறக் கழுவி மலர் சூட்ட வேண்டும் என்பதையும் மறந்தனையோ?” என்று கேட்கத் தொடங்கினான்.

கணவனைக் காணவும் வெறுத்த அவள், அவன் கேட்கும் கேள்விகளைக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்டாள். "அன்ப! நீ வரும் வழியில் உள்ள தாமரைப் பொய்கையில், நன்கு பருத்து, மலரும் பருவம் பெற்று விளங்கும் இரண்டு அரும்புகளுக்கிடையே, ஒரு தனி மலர் ஓங்கி மலர்ந்து நிற்க, கரைவளர் மரத்தில் வாழும் பறவை ஒன்று தாழப்பறந்து, அதை அலைக்க, அதனால், அம்மலர் சிறிதே வளைத்து தாழ, அதே நிலையில் அம்மலரின் அகத்தே படிந்திருந்த பனிநீர் தெறித்து, அவ்வரும்புகள் மீது விழும் காட்சியைக் கண்டு வந்த உன் கருத்தில், எவ்வித உணர்ச்சியும் உண்டாகவில்லையோ? அக்காட்சி, கணவன் பரத்தையர் பின் சென்று விட்டானாகச், சிந்தும் கண்ணிர் கொங்கையில் வீழ்ந்து சிதறக் கலங்கி நிற்கும் அவன் மனைவியின் துயர் நிலையை நினைப்பூட்ட வில்லையோ?” என்று கேட்டுச் சினந்தாள்.