பக்கம்:மருதநில மங்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை7


வாழும் மக்கள், அக் கருநீல மலர்களைப் பறித்துக் கொணர்ந்து, மன்றுகளில் விலை கூறி விற்பர். அவர்கள், அம்மலரைப் பறித்து வருங்கால், வயலையடுத்திருக்கும் குளத்தில் பூத்துக் கிடக்கும் தாமரை மலரின் தேன் உண்டு, அம்மலரில் அயர்ந்து உறங்கும் தும்பி விழித்துக் கொண்டு, அக்கருநீல மலர்களைக் காணும். கண்டதுமே, தான் வாழும் தாமரை மலரையும், அத்தாமரை தழைக்கும் பொய்கையையும் மறக்கும். மறந்து, அம்மகளிர் கொணரும் கருநீல மலரோடு ஊருள் புகும். மலர் மகளிர், ஊர் எல்லையை அடைந்ததும், ஆங்குக் காவல் மேற்கொண்டிருக்கும் யானையின் மதநீர் நாற்றத்தில் மனதை இழக்கும். அது ஆங்கு வருவதற்கு முன்னர், அம்மத நீரில் படிந்து, உண்டு, மகிழ்ந்திருக்கும் வண்டுகள், வரவேற்று அன்புடன் அளிக்கும் அம்மத நீர் விருந்துண்டு மகிழும். பகற் காலமெல்லாம் அங்கேயே கிடக்கும் அத்தும்பி, மாலை வந்ததும், முல்லை மலரின் மணம் மனத்தை மயக்க, அம் மணம் வந்த வழியே சென்று, ஊருள் புகும். ஆங்கு அம்முல்லை மலர், தாம் விரும்பும் கணவரை, அவர் மகிழுமாறு ஆரத் தழுவிக் கிடக்கும் மகளிரின் கூந்தலில் கிடப்பது கண்டு, அக் கூந்தலைச் சுற்றி மொய்த்து, அம்முல்லை மலர்த் தேனைக் குடித்து மகிழும். அப் பேரின்ப நுகர்வால், பண்டு தான் வாழ்ந்த பொய்கையை மறக்கும். அத்துணை நீர் வளம் செறிந்தது. அவன் ஊர். இத்தகைய வளம்மிக்க இவ்வூருக்குரிய அவன் கொடியனாதல் இயலாது. அறியாது பிழை புரிந்தானாயினும், ஒழுக்கத்தின் உயர்வுணர்ந்து மீண்டு இவண் வந்து சேர்வன், வருந்தற்க!” என ஆறுதல் உரைத்து அகன்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/9&oldid=1129302" இலிருந்து மீள்விக்கப்பட்டது