பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



XII

                             

தமிழில் பெரிய அளவில் வெளிவரும் முதல் கலைச் சொல் தொகுதியாக இருப்பதால் தமிழக வரலாற்று நாயகராகத் திகழும் முத்தமிழறிஞர், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் முன்னுரையோடு வெளியிட வேண்டும் எனப் பெரிதும் விரும்பினேன். என் மீது கொண்டுள்ள அன்பினாலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியின்பால் உள்ள ஆர்வத்தினாலும் பல்வேறு பணி பளுவுக்கிடையிலும் நூலைப் படித்து, திறனாய்வுப் போக்கிலான அருமையான முன்னுரை வழங்கிச் சிறப்புத்துள்ள டாக்டர் கலைஞர் அவர்கட்கு என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.

தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஆர்வமும் ஊக்கமும் அளித்து வரும் பெரியவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் என் மீதும் என் தமிழ்ப் பணியின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். அவர்கள் இந்நூலைப் படித்து மிகச் சிறப்பான வாழ்த்துரை ஒன்றை வழங்கிச் சிறப்பித் துள்ளார்கள். அவர்கட்கு என் உளமார்ந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

என்னை ஓரளவு சரியாகப் புரிந்து கொண்டு என் முயற்சிகளை எல்லாவகையிலும் ஊக்கி அவ்வப்போது அரிய ஆலோசனைகளை வழங்கி வருபவர் மாண்புமிகு கல்வியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். இந்நூலை முழுமையாகக் கண்ணுற்று மிக அருமையான திறனாய்வை சிறப்புரையாக அளித்து மகிழ்வித்துள்ளார்கள். அவர்கள் அன்புக்கு நான் என்றும் கடப்பாடுடையவன்.

இந்நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரையை வழங்கியுள்ளார் தமிழ் நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் மின்துறை அமைச்சர் மாண்புமிகு ஆற்காடு நா. வீராசாமி அவர்கள். இந்நூலைப் பெற்றபோது அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் பாராட்டு அன்பு மொழிகளும் மறக்க முடியாதவை; என்றென்றும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கவை.

இந்நூலை விரைவாக அச்சேற்றி வெளிக்கொணர்ந்ததோடு இரண்டாவது தொகுதியை அச்சேற்றும் முயற்சியிலும் முனைப்புடன் ஈடுபட்டுள்ள திருமதி சித்தை சௌதா அவர்கட்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

எனது முந்தைய நூல்களைப் போன்றே இதையும் தமிழுல கம் ஏற்று ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு.

மணவை முஸ்தபா நூலாசிரியர்