பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கள், விஞ்ஞான விளக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை. மக்களின் பலவகை மூடநம்பிக்கைகள் ஒரு வகையில் அறிவு நாட்டத்திற்குத் தடையாயிற்று எனினும், அறிவியல் உண்மை விளக்கங்கள் தாய்மொழியில் விளக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும. கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த கல்வியைத் தமிழிலேயே பயில்வதற்கு வழிசெய்யும் முயற்சியாகப் பலநூறு ஏடுகள் தமிழில் வெளிவந்துள்ளன. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி ஏடுகளும் பல இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் பல் கலைக்கழகப் பட்டப்படிப்பு அனைத்தையும் தமிழிலேயே பயிலச் செய்யும் அளவிற்கோ, மாணவர்களே பயில முன்வரும் அளவிற்கோ பல்கலை அறிவியற் பாடங்கள் அனைத்தும் தமிழில் வெளிவருவதற்கான முயற்சி தொடரவேண்டியுள்ளது. மருத்துவம், பொறியியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கால்நடை மருத்துவம் முதலான துறைகள் பலவற்றையும் தமிழில் வழங்கச் செய்யும் நோக்கம் நிறைவேற வேண்டு மெனில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் நாள்தோறும் வெளிவரும் புதிய உண்மைகளையும் நுணுக்கங்களையும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்து தமிழில் அரங்கேற்றும் கடமையைத் தொடர்ந்து நிறை வேற்ற வேண்டும்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்த அறிவியல் துறைகள் இன்று மேலும் பல கிளைகளாக விரிவடைந்திருப்பது மட்டுமின்றி. கடந்த ஒரு நூற்றாண்டில் அறிவியல் எய்திய வளர்ச்சி விகிதத்தை இந்த நூற்றாண்டின முதல் முப்பது ஆண்டுகளிலேயே எட்டியுள்ளது. இன்றோ அதைப் போன்று மேலும் பல மடங்கு விரைவுடன் அறிவியல் வளர்ந்து வருகின்றது. அது உலகத்தின் பல நாடுகளிலும் (சில மொழிகளிலும்) நாளும் உருவாகி வரும் அறிவியல் வளர்ச்சியின் விரைவு என்பதால், தாம் அந்த விரைவுக்கு ஈடுகொடுக்கும் சூழல் இல்லை. எனினும் அவற்றின் பயனை நாமும் உடனுக்குடன் பெறுவதற்கு இன்றியமையாத மொழிபெயர்ப்புத் திறனை மிகப் பெரிய அளவில் மட்டுமின்றி, விரைவாகச் செய்திடவல்ல கணிப்பொறிப் பயன்பாட்டையும் மேற்கொண்டு நிறைவேற்றிட முனைய வேண்டும். அப்படிப்பட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலன்றி, நமது முன்னேற்றம் மட்டுமன்றி. வாழ்க்கை நிலையும் மேலும் பின்னடைவுக்கு ஆளாகி, நாம் உலகோரால் கருதப்பட வேண்டாதவர் ஆவோம்.