பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI

வதையே என் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவேன்" என உறுதியளித்தான்.

என மகனோடு இணைந்து நானும் கடந்த ஆறாண்டு காலமாக மருத்துவப் பாடநூல்களைப் படித்து வரலானேன். என் ஐயப்பாடுகளையெல்லாம் நான் தமிழில் கேட்பதும் அவற்றிற்கான விளக்கங்களை அவன் எனக்குத் தமிழில் விளக்குவதும் வழக்கமாகியது. இதன்மூலம் எங்கள் இருவரிடையேயும் மருத்துவக் கருததுக்களைத் தமிழில் பரிமாறிக் கொள்வது எளிதானதாக மட்டும் அமையவில்லை. இனிமையானதாகவும அமைந்ததெனலாம். அப்போதெல்லாம் வெளிப்படும் கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொள்வதையும் நான் வாடிக்கையாக்கிக் கொண்டேன். கடந்த ஆறு ஆண்டு காலமாக என் மகன் டாக்டர் செம்மலின் உறுதுணையோடும் என் அருமை நண்பர் திரு இரா. நடராசன் அவர்களின் ஒத்துழைப்போடும் டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்களின் உதவியோடும் "மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் பெயரில் இந்நூல் வெளி வந்துள்ளது.

எனினும், இதற்கான அடித்தளம் முப்பதாண்டுகட்கு முன்பே என் உள்ளத்தில் அழுத்தமாகப் போடப்பட்டிருந்ததை இந்நேரத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

இன்றைக்குச் சரியாக முப்பது ஆண்டுகட்கு முன்பு, 'Wonder Drugs' எனும் ஆங்கில மருத்துவ நூலை தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காகத் தமிழில் பதிப்பிக்கும் பணியை நான் மேற்கொண்ட போதுதான், தமிழைப் பொறுத்தவரை இம்முயற்சியில் நாம் எங்கே நிற்க வேண்டியுள்ளது என்பது தெளிவாகப் புலப்பட்டது. அந்நூலை வெளியிட்டதனால் நான் பெற்ற பட்டறிவு மிகவும் பயனுள்ளதாயமைந்தது. 'உயிரியல்' என்ற நூலையும் யுனெஸ்கோ கூரியர் திங்களிதழில் தொடர்ந்து 1970இல் புற்றுநோய் பற்றியும் அடுத்து 1972இல் இதய நோய், பற்றியும் சிறப்பிதழ்களை தமிழில் வெளியிடும் போது மருத்துவத்தைத் தமிழில் சொல்லும்போது எதிர்ப்படும் இடர்ப்பாடுகள் என்னென்ன என்பது புலனாகியது.

மருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வெளிவர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம். ஆனால், பிற மொழிகளில் வெளிவரும் அளவுக்கு அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவ நூல்கள் தமிழில் வெளிவருவதில்லை. இதற்கு என்ன காரணம்?

நம்மிடையே அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளில் பொருளறிவும் தமிழறிவும் எழுத்துத் திறனுமிக்கவர்-