பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

கிறோம். இவை தவிர, முன் பழக்கத்தில் இருந்து, மறைந்து போன சில தமிழ் அறிவியல் சொற்களைக் கண்டுபிடித்து மறுபடியும் அவற்றிற்குப் புத்துயிரூட்டி பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். திரு. மணவை முஸ்தபா அவர்கள் இந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். "Slough" என்றால் "பொருக்கு", "Desquamation" என்றால் "செதிளுதிர்வு" என்று மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொற்களைப் பயன்படுத்தும் முறையைச் சுட்டியிருக்கிறார்கள்.

இது தவிர பழைய சித்த மருத்துவ நூல்களில் உடலுறுப்புகளையும் நோய் வகை மருத்துவ முறைகள் போன்றவற்றைச் சுட்டுவதற்கும் பல சொற்கள் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். நாடி, நரம்பு, நாளம், நோய் என்று பல சொற்களை நாம் எடுத்தாள்கிறோம். அதைப் போலவே இன்னும் பல சொற்கள் இருக்கக் கூடும். சித்த மருத்துவர்களும், தமிழறிஞர்களும் கூட்டாகச் சேர்ந்து ஒரு தமிழ்-ஆங்கில (சித்த) மருத்துவ அகராதியைத் தயாரித்தால் அது நமக்குப் பெரும் பயனளிக்கும். மறைந்த தமிழ் மருத்துவ அறிவியல் சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆங்கில மருத்துவச் சொற்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்று அறியும்போது சில சொற்கள் காரணப் பெயர்களாக இருக்கக் காண்கிறோம். அதே காரணங்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து அவற்றில் இருந்து புதுத் தமிழ் மருத்துவச் சொற்களை உருவாக்கும் வழியும் கடைப்பிடிக்கப்பட்டு, அப்படி சில நல்ல சொற்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. "Thyroid" என்பதற்கு கேடயச் சுரப்பி என்றும் "Adrenal" என்பதற்கு அண்ணீரகச் சுரப்பி என்றும் சொற்கள் உருவாக்கப்பட்டு அவை தமிழில் பழக்கத்தில் வந்துவிட்டன. இவைகளை எல்லாம் கூடியவரை ஆசிரியர் அகராதிக்குள் இணைத்திருக்கிறார்.