பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நுழைவாயில்

எனது கால் நூற்றாண்டுக் கனவுகளிலொன்று இன்று நனவாக நூலுருவில் உங்கள் கரங்களில் தவழ்வது எனக்கு எல்லையில்லா மகிழ்வூட்டுவதாயுள்ளது. நான் இலக்கியத்தையும் மொழியியலையும் முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்தவன் என்றாலும் எனக்கு எப்போதும் அறிவியல், தொழில்நுட்பப் பாடங்களில் குறிப்பாக மருத்துவத்துறை நூல்களைப் படிப்பதிலும் அவற்றைப் பற்றித் தமிழிலே சிந்திப்பதிலும் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம். மருத்துவத்தைத் தமிழில் சொல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை என் இளைய மகன் செம்மல் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியதன் விளைவே, அவன் மருத்துவ மாணவன் ஆகியது. மருத்துவக் கல்லூரியில் அவன் காலடி எடுத்து வைக்கும்முன் அவனிடம் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உன் எதிர்கால நல்வாழ்வுக்காக மட்டும் உன்னை நான் மருத்துவம் பயில அனுப்பவில்லை. என்னுள் பல ஆண்டுகளாகக் கனன்று கொண்டிருக்கும் பேராசையொன்றை உன்மூலம் நிறைவேற்றி, உன் வாழ்வோடு என் வாழ்வையும் வெற்றியுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற பேரவா எனக்குண்டு. நீ மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபின் உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மருத்துவ நூல்களைத் தமிழில் தர வேண்டும். இவ்வெண்ணத்தை மருத்துவக் கல்லூரியில் கால்வைக்கும் போதே உறுதிமிக்க முடிவாக உன் உள்ளத்தின் அடித்தளத்தில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். மருத்துவத்தை ஆங்கில மொழிமூலம் படித்தாலும் அதைத் தமிழில் சொல்வது எப்படி என்ற சிந்தனை எப்போதும் உனக்கு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி நீ தமிழில் சொல்ல