பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

terms) ஆகும். ஆங்கிலக் கலைச்சொற்களுக்கேற்ற நேர்த் தமிழ் கலைச்சொற்களை, எழுத முனையும் எல்லோராலும் உரிய முறையில் கலைச் சொற்களை உருவாக்க இயலுவதில்லை. அதற்கேற்ற மொழியறிவும் இலக்கணப் புலமையும் வேர்ச்சொல் அறிவும் போதிய அளவு இல்லாததால் ஆங்கிலக் கலைச்சொற்களை மொழி பெயர்ப்புச் செய்தும் சில சமயங்களில் ஒலிபெயர்ப்புச்செய்தும் பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டாகிறது. இதனால் கலைச்சொல் மொழிபெயர்ப்பு நீளமாகவும் பொருட் பிறழ்வுடையதாகவும் அமைய நேர்கிறது. பெயர்ப்பால் போதிய பொருள்விளக்கம் பெற முடிவதில்லை. இதனால் சொற்செட்டும் பொருட் செறிவுமுடைய சுருங்கிய வடிவிலான கலைச்சொற்கள் உருவாக இயலாமல் போகிறது. இதன் விளைவாக ஆர்வத்தோடு எழுத முனைந்த நூலாசிரியர் ஒரு சில பக்கங்களிலேயே மனச்சோர்வடைந்து தன் முயற்சியை தொடராது விட்டுவிட நேர்கிறது. இதனை, இம் முயற்சி யாளர்கள் மூலம் கேட்கும்போதெல்லாம் கலைச்சொல் இடர்ப்பாட்டை நீக்கினால் பொருளறிவுமிக்க, ஒரளவு தமிழறிவும் எழுத்தாற்றலுமுள்ள இவர்கள் நூல் எழுத ஏதுவாக இருக்குமே என்ற எண்ணம் என்னுள் அழுத்தம் பெறும். அதன் விளைவாக அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத்துறைக் கலைச்சொல்லாக்க முயற்சியில் முழு ஈடுபாடு கொள்ளலானேன்.

நூல் எழுதுவோருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்கட்கும் படிப்பார்வலர்கட்கும் மட்டும் பயன்படுவதோடு அமையாது சாதாரண வாசகர்கட்கும் பயன்பட வேண்டும். ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொல்லும், அக்கலைச்சொல்லுக்கு விளக்கமாக ஒரு அறிவியல் செய்தியும் படிப்போர்க்குக் கிடைக்க வேண்டும் என்று விழைந்தேன். அதையும் பட விளக்கத்தோடு தந்துதவ வேண்டும் என விரும்பினேன். விளைவு களஞ்சியப் போக்கில் ஒரு புதுவகை கலைச்சொல் அகராதியை வடிவமைத்தேன்.