பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மருத்துவ விஞ்ஞானிகள்



பிரெஞ்சு அரசு, இந்த பட்டுத் தொழில் நலிவைக் கண்டு மருண்டது என்ன காரணம் இதற்கு என்று பிரெஞ்சு ஆட்சி ஆராய்ந்ததில், பட்டு நூலைத் தரும் பட்டுப் பூச்சிகளுக்கு ஏதோ ஒரு வித நோய் உருவானதால், பெரும்பாலான பட்டுப் பூச்சிகள் அழிந்தன; செத்தன என்று தெரிந்தன அந்த அரசுக்கு!

இந்தப் பட்டுப் பூச்சி அழிவைத் தடுப்பது எப்படி என்று பிரெஞ்சு அமைச்சரவை கூடி ஆராய்ந்தது! யாரைக் கொண்டு இந்த நோயைத் தீர்ப்பது என்று அப்போது அந்த அரசு திணறிக் கொண்டிருந்தது.

நாட்டின் வருமானப் பாதிப்பு ஒரு புறம் ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர் வேதனைகள், பரதவிப்புகள், பசித் துடிப்புகளால் உண்டாகும் பட்டினிக் கொடுமைகள், அதனால் தினந்தோறும் ஏற்படும் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கைப் பெருக்கங்கள் ஆகியவற்றைக் கண்டு பிரான்ஸ் திகைத்துத் திண்டாடியது.

எல்லாச் செயல்களையும், எல்லாரிடமும் செய்து முடியுங்கள் என்று விட்டுவிட முடியுமா? அல்லது கேட்கத்தான் இயலுமா? அதற்கென ஒரு தகுதிவாய்ந்த குழுவை உருவாக்க வேண்டாமா?

ஒருவரை, இதற்கு இவர்தான் தகுதியானவர் என்று தீர்மானித்த பின்பு, அந்த முடிவை அடிக்கடி மாற்றமுடியுமா? அவ்வாறு மாற்றினால் அந்தச் செயல்கள்தான் பலன் தருமா?

‘தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும்’ என்ற திருவள்ளுவர் பெருமானின் கருத்தையே பிரதிபலித்த அப்போதைய பிரெஞ்சு அரசு, பட்டுப் பூச்சி நோயை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கூறும் தகுதியுடைய ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியர், இளம் விஞ்ஞானியாக அந்த நேரத்தில் அறிவியல் துறையில் வளர்ந்துக் கொண்டிருந்தார்.