பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

103



அந்த விஞ்ஞான வித்தகருக்குரிய தகுதி, தரம், திறமை, விடா முயற்சி, துணிவான செயல்கள் ஆகியன மூலமாக பாஸ்டியர் புகழ் பிரான்ஸ் நாடு முழுவதும் ஒருவித செல்வாக்கை உருவாக்கிக் கொண்டிருந்ததையும் பிரெஞ்சு அரசு உணர்ந்தது.

லூயி பாஸ்டியருடைய திறமைகளை நன்றாக உணர்ந்த பிரெஞ்சு ஆட்சி, அவரை அழைத்து பட்டுப் பூச்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன? ஏன் அந்த நோய் வந்தது? அதற்கான காரணங்கள் யாவை? என்பதைக் கண்டுபிடித்து அந்த நோயைப் போக்குவதற்கான வழிவகைகள் என்ன என்று ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.

அறிவியல் இளம் விஞ்ஞானியான லூயி பாஸ்டியர், பிரெஞ்சு அரசு தன்னை நம்பி ஒப்படைத்தப் பணியை ஏற்றுக் கொண்டார்.

அன்று முதல் எங்கெங்கே பட்டுப் பூச்சிகள் பண்ணை உருவாகி இயங்கி வந்தனவோ, அங்கங்கே எல்லாம் சென்று தனது ஆராய்ச்சியைத் துவக்கினார்.

பட்டுப் பூச்சிகளுக்கு ஏன் இந்த நோய் வருகிறது? என்ன காரணத்தால் அந்த நோய் வருகிறது? அதை மற்ற பட்டுப் பூச்சி பண்ணைகளுக்குப் பரவாமல் தடுக்க வழிகள் என்ன? அந்த நோயின் பெயர் என்ன? இதற்கு முன்பு பட்டுப் பூச்சிகளுக்கு இத்தகைய ஒரு கொடிய நோய் பரவிப் பூச்சி இனங்களை அழியுமாறு செய்ததுண்டா? என்ற கேள்விகளுக்குரிய காரணங்களை அவர் சென்று சோதனையிட்ட பண்ணைகளிலே பாஸ்டியர் ஆராய்ச்சி செய்தார்.

ஒரு பட்டுப் பூச்சி பண்ணைக்குச் சென்றார், அங்கே சில நூறு பட்டுப்பூச்சிகளை ஆராய்ச்சி செய்தார். பண்ணையிலே உள்ள பூச்சிகளில் நோய் பிடித்தவை எவை? நோயில்லாதவை எவை என்பதைக் கண்டறிந்தார்.

நோயுற்ற பட்டுப் பூச்சிகளை ஒரு குழுவாகவும், நோயற்ற பூச்சிகளை மற்றொரு கூட்டமாகவும் பிரித்து இரு வகைப் படுத்தினார்.