பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

107லூயி பாஸ்டியர், இரண்டு மகள்களைத் தொடர்ந்து சாவுக்குப் பலிகொடுத்துவிட்ட நேரத்தில், மூன்றாவது மகளையும் அவர் திடீரென ஏற்பட்ட நோய்க்குப் பலி கொடுத்து விட்டாரென்றால், அடுத்தடுத்து சொல்லி வைத்தார் போல குடும்பத்து உயிர்களைச் சாவு பலியாக்கிக் கொண்டே வருகிறதென்றால், யார் மனம்தான் அமைதியாக, நிம்மதியாக இருக்கமுடியும் ? எண்ணிப் பாருங்கள்.

எனவே, லூயி பாஸ்டியர் உள்ளம் வெந்தும் - நொந்தும் கிடந்தது. உலக விஞ்ஞானிகள் எவர் வீடுகளிலும், பாஸ்டியர் இல்லத்து இழவுகளைப் போல, அடுத்தடுத்து எவர் குடும்பங்களிலும் இவ்வாறு நடைபெற்றதாக ஒரு சம்பவமும் அறிவியல் அறிஞர்கள் வரலாறுகளிலே காணப்படவில்லை எனலாம்.

அடுத்தடுத்து நடைபெற்று வந்த பாஸ்டியர் வீட்டுச் சாவுகளால் பட்டுப் பூச்சி ஆராய்ச்சியும், அந்த நோய் தடுப்புக்கான வசதி வாய்ப்புகளும் ஏற்படாமல் தடைமேல் தடைகளாகவே சம்பவங்கள் நடந்து வந்தன.

ஆராய்ச்சியில் மறுபடியும் ஈடுபட்டால், ஓரளவு மன நிம்மதியாவது கிடைக்குமென்று அவர் கருதினாலும், அவரால் அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலைகளே அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தன.

ஏனென்றால், மனிதனுக்கு வரும் நோய்; ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மெல்ல மனிதனையும் கடிக்க வருவதைப் போல, திடீரென்று லூயி பாஸ்டியரே, நோய் என்ற வெந்தணலில் வீழ்ந்தார். அதனால் அவர், பல மாதங்களாக எதனையும் செய்ய முடியாமல் இருந்தார்.

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியர் தனது ஆராய்ச்சிக்குரிய சோதனை நிலையம் ஒன்றை, எல்லா வசதிகளும் அமைந்த விதத்தில் அமைத்துக் கொண்டார்.

இந்த அறிவியல் ஆய்வுக் கூடத்தை அமைக்க, பிரான்ஸ் மன்னர் உதவியும், பிரெஞ்சு அரசு உதவியும் அவருக்கு சேர்ந்தார் போல கிடைத்தன.