பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

9மருத்துவ மறுமலர்ச்சி வீரர்; வில்லியம் ஹார்வி!

மருத்துவத் துறையின் மறுமலர்ச்சிக்கு அவ்வாறு உழைத்திட்ட மருத்துவச் சான்றோர்களில் ஒருவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவப் பேரறிஞர்.

நமது மனித உடலில் எண்ணற்ற விஞ்ஞான விந்தைகள் நாள்தோறும் நடந்துக் கொண்டே இருக்கின்றன. அது போலவே, உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் மனித உடலின் விந்தைகளை ஆராயும் அறிஞர்களும் தோன்றியபடியே இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் தோன்றினார்கள், வாழ்ந்தார்கள், மறைந்தார்கள் என்றில்லாமல், மருத்துவத் துறையிலும் - மனித உடலிலும் நம்மையும் அறியாத, நம்மாலும் உணர முடியாத சம்பவங்களை எல்லாம் ஒரு மர்மக் கதைபோல, துப்பறிந்துக் கூறிய விஞ்ஞானிகளின் அறிவுத் தியாகத்தை நம்மால் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

மனித உடலில் அன்றாடம் தோன்றும் மர்மங்களை, மாற்றங்களை, அதனால் உருவாகும் நோய்களை, அவற்றைக் குணப்படுத்தும் அறிவியல் கருவிகளை, மருந்துகளை, மருத்துவத் துறை மேதைகள் கண்டுபிடிக்கும் போதெல்லாம், அந்தந்த நாட்டின் சமுதாய மூடநம்பிக்கைகளும் - அவர்களை எதிர்த்துப் போராடிய நிகழ்ச்சிகளும் ஏராளமாக உருவாயின.

மூடநம்பிக்கை - முணுமுணுப்புகள்!

அந்தக் காலத்தில் வைசூரி, காலரா, பிளேக், அம்மை நோய் வகைகள் போன்ற கோரமான, கொடிய நோய்கள் தோன்றி, மக்களை வாட்டி வதைத்து வேதனைப்படுத்திய நேரங்களில், அவை எல்லாமே தேவக் குற்றங்கள் - நாம் தவறு செய்ததால் வந்த வினைகள் என்று நம்பி, மேலை நாட்டு மூடநம்பிக்கைகள் முணுமுணுத்தன.

ஆனால், நமது நாட்டு மூட நம்பிக்கைகள், அந்த நோய்கள் எல்லாம் மாரியம்மன் கோபத்தாலும், முனிஸ்வரன் சேட்டை