108
மருத்துவ விஞ்ஞானிகள்
பிரான்ஸ் மன்னர், லூயி பாஸ்டியர் அறிவு மீதும், ஆய்வு மீதும் முழு நம்பிக்கை உடையவர் மட்டுமல்லர், அவர்மீது அளவிற்கும் மேலான அன்பும், பற்றும் உடையவர்.
எனவே, லூயி பாஸ்டியர் தனக்கோர் ஆய்வுச் சாலை தேவை என்று மன்னருக்கு எழுதிய கடிதத்தைக் கண்டதும், பிரான்ஸ் மன்னர் அதிகாரமும், அரசு அதிகாரமும் இணைந்து, அவருக்குரிய உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தன!
அந்த அறிவியல் சோதனைச் சாலை, லூயி பாஸ்டியருக்கு மன நிறைவைக் கொடுத்ததுடன், மறுபடியும் சோக, துன்ப மூட்டைகளைச் சுமையென்று எண்ணாமல், அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மறுபடியும் தீவிரமான ஆராய்ச்சி எண்ணங்களிலே அவர் ஈடுபட்டார்.
சில மாதங்கள் சென்றன. பாஸ்டியர், தனது மனைவி, மகள், உதவியாளர்கள் சிலர் துணையுடன் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார். இப்போதுள்ள உடல் நலக் குறைவாலும், உடல் வளம் குன்றியமையாலும், லூயி பாஸ்டியரால் நடக்க முடியாத நிலை உருவானது.
இருந்தாலும், அந்த குறையை அவர் ஒரு பலவீனமாகக் கருதவில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தனது உதவி யாளர்கள் துணையோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டார் லூயி பாஸ்டியர்.
தனது ஆராய்ச்சியின் விளைவாக, லூயி என்னென்ன கண்டாரோ, அந்த விவரங்களை எல்லாம் அவர் கூறக் கூற, பாஸ்டியர் மனைவி, மகள், உதவியாளர்கள் அனைவரும் அப்படியே தவறாமல் எழுதிக் கொண்டார்கள்.
ஆராய்ச்சிகளும், இந்த முறைகளாலே நாளுக்கு நாள் தொடர்ந்து நடைபெற்று வந்ததின் பயனாக, லூயி பாஸ்டியரது சிந்தனை வெற்றி பெற்றது.
இவ்வளவு இடைவிடா இடையூறுகளுக்குப் பிறகும் கூட, அறிவியல் துறையில் அவர் பெற்றிட்ட வெற்றி என்னவென கேட்கிறீர்களா? இதோ அந்த சாதனை!