பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

மருத்துவ விஞ்ஞானிகள்


பிரான்ஸ் நாட்டுப் பொருளாதார நிலை வளமானது; பட்டுத் தொழில் துறை விரிவானது; வளர்ந்தது. அந்நாட்டு நெசவாளர்களை அரசு கஞ்சித் தொட்டிகளைச் சந்திக்கும் நிலையை லூயி பாஸ்டியர் அறிவியல் அறிவு தவிர்த்தது.

எனவே, இத்தகைய ஓர் அற்புதமான அறிவியல் அறிஞரின் வரலாற்றுச் சாதனைகளால் உருவான மருத்துவ விவரங்களைத் தொடர்ந்து படிப்போம் வாரீர்.

லூயி பாஸ்டியர் பாரீஸ் கல்வி -
கரை மோதிய நீர்க் குமிழ் ஆனது!

இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள ஒரு சிறு தீவான அஜாஜியோவில், 1769-ஆம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன், 1821-ஆம் ஆண்டுவரை, செயிண்ட் எலினா என்ற ஒர் ஒதுக்குப் புறத் தீவிலே வாழ்ந்து, மறைந்து, ஏறக்குறைய தனது ஐம்பத்தொன்றே முக்கால் ஆண்டுகளாக, வெல்வாரும், வீழ்த்துவாரும் இல்லாத ஒரு சரித்திர நாயகனாக வாழ்ந்தான் என்கிறான் கே.எம். தாம்சன் என்கிற வரலாற்றாசிரியன் தனது “நெப்போலியனின் எழுச்சியும் - வீழ்ச்சியும்” என்ற நூலில்!

இதற்கு என்ன காரணம் தெரியுமா? நெப்போலியன் தனது போர் வீரர்களிடம் பழகும்போது, மனிதாபிமானியாகவும், கண்ணியமாகவும் பரோபகாரியாகவும், கம்பீரமாகவும் நடந்து கொண்ட பண்பாடுகள்தான் என்றால், எல்லாரும் வியந்து போற்றுவார்கள்.

அந்தப் படை வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் தேவைகளோ, அவை அனைத்தையும் பொறுப்போடு அவனே உத்தரவிட்டு செய்து கொடுத்தான். அவனது உத்தரவுகள் நடந்துள்ளனவா என்று மேற்பார்வையும் பார்த்தான்.