உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

113



ஜோசப் பாஸ்டியர், நெப்போலியன் படைத் தளபதியாகப் பணியாற்றியவரே தவிர, எந்தப் பள்ளியிலும் சேர்ந்து அவள் முறையாகக் கல்வி கற்றவரல்லர்.

தனது முயற்சிகளால் சில அரிய நூல்களைப் படித்துக் கல்வி அறிவு பெற்றார். போர்க்களம் பற்றிய நூல்களாக இருந்தால் போதும், அதைப் படித்து முடித்துவிட்ட பின்புதான், மற்ற வேலைகளையே செய்வார்.

அந்த அளவுக்கு அவர் சிறுவயதிலேயே போர்க் கலை நூற்களைப் படிப்பதிலே மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். ஜோசப் பாஸ்டியர் சிறந்த வீரராக விளங்கியவரே தவிர, வீண்பேச்சுப் பேசிக் காலம் கழிக்க மாட்டார். மாவீரன் நெப்போலியன் எப்படி எந்தப் பிரச்சனையானாலும் அதை யோசித்து, ஆழ்ந்து, சிந்தித்து, பிறகு செயலாற்ற முனைவாரோ, அதேபோல ஜோசப் பாஸ்டியரும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர யோசித்து, சிந்தித்த பிறகே அதற்கான வேலைகளில் இறங்கி ஈடுபடுவார்.

அத்தகையத் திறமையும், துணிவும், சுறுசுறுப்பும், பரபரப்பும் கொண்டு பணியாற்றி வருவதைக் கண்ட அந்தச் சிற்றுார் மக்கள் அவரிடம் நெருங்கிய நண்பர்களாகப் பழகலானார்கள்.

ஜோசப் பாஸ்டியர் துணைவியாரான ஜீன் எடினட் ரோக்யீ, பெண்களுக்கே உரிய சிக்கன வாழ்க்கை, சீரான வாழ்க்கை வாழ்ந்து, கணவன் செய்யும் தோல் பதனிடும் பணிக்கு உறுதுணை புரிந்து வந்தார்.

கணவனும், மனைவியும் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், சிறுவன் பாஸ்டரையும், மற்றக் குழந்தைகளையும் சிரமப்பட்டுக் காப்பாற்றும் நிலையிலேயே திண்டாடினார்கள்.

‘டோல்’ ஒரு சிறிய ஊர்தானே! அந்தக் கிராமத்தில் ஜோசப் பாஸ்டியர் தனது தோல் பதனிடும் தொழிலைச் செய்து வந்தார். ஆனாலும், போதிய வருவாயில்லாமல் சிரமம் பட்டுக் கொண்டே வாழ்ந்தார்.