பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

121


நாட்டமில்லை. ஏதோ ஒன்றை இழந்து விட்டவன் நிலைபோல. லூயிக்கு வீட்டுக் கவனம் அடிக்கடி துன்புறுத்தியது.

பார்பட் முயற்சிகள் எல்லாம் பலன் தரவில்லை. லூயியின் மன நிலையைப் புரிந்து கொண்ட அவர், பெற்றோர், பாசத்தால் மீளா நோய்க்கு ஆளாகிவிடுவானோ என்று அச்சப்பட்டு, ஜோசப் பாஸ்டியருக்கு லூயியின் நிலையை தந்தி மூலம் பார்பட் தெரிவித்தார்.

பார்பட், தனது நண்பர் பேர்பையரையும் வரவழைத்து, நேரிடையாகவே ஆறுதல் கூற வைத்தார். எந்தத் தேறுதலும், ஆறுதலும் லூயியின் வீட்டுக் கவனத்தை வீழ்த்தவில்லை! நாளுக்கு நாள் உணவும் கொள்ளாமல், உறக்கமும் இல்லாமல் அவர் சோர்வடைந்தவரானார்.

தந்தியைப் பெற்ற ஜோசப் பாஸ்டியர் பாரீஸ் நகர் வந்தார். மகனிடம் எதுவும் பேசவில்லை. ஏனென்றும் கேட்கவில்லை லூயியை பார்பட் ஆசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, லூயி பாஸ்டியரை அழைத்துக் கொண்டு ஆர்பாய் நகர் திரும்பினார்.

ஜோசப் பாஸ்டியர் தனது ஆற்ற முடியாத கோபத்தை மகனிடம் காட்டிக் கொள்ளவில்லை. மகனுடைய உள்ளத்தைப் புரிந்து கொண்டார். என்றாலும், அவரது மனம் அலைமோதும் கடலாகவே இருந்தது: ஏமாற்ற அலைகளின் குமிழ்கள் அடிக்கடி உருவாவதும், கரையிலே அலைமோதி உடைவதுமான மனச் சூழ்நிலையிலே ஜோசப் இருந்தார்.