உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

123


மனிதனுக்கு எண்ணற்ற ஆசைகள் தோன்றலாம்; பிறகு அதுவே அழியலாம் அல்லது முடங்கி விடலாம்! அதற்காக, தோன்றும் எண்ணங்கள் எல்லாமே நடந்து விடும் என்று நினைப்பது இயற்கையான தவறே ஆகும்.

ஆசை நிறைவேறா விட்டால், அதை எண்ணிக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது கடைந் தெடுத்தக் கோழைத்தனம். வெற்றி பெறவில்லையே நமது ஆசை தோல்வி கண்டு விட்டதே, என்று அனல் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கவும் கூடாது.

‘ முயற்சி திருவினை ஆக்கும் ‘ என்பது பொய்யா மொழி என்று கருதிய ஜோசப் பாஸ்டியரும், அவரது துணைவியாரும், தங்களது கவலையை மகனுக்கும் காட்டாமல், மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தாமல், மறுபடியும் ஆர்பாய் நகரிலுள்ள, லூயி பாஸ்டியர் முன்பு படித்த பள்ளியிலேயே சேர்த்துக் படிக்க வைத்தார்கள்.

- லூயி பாஸ்டியர், தனது பாரீஸ் நகர் கல்வியால் பெற்றோர்கள் அடைந்த கவலைகளையும், ஏமாற்றத்தையும் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார். என்றாலும், அவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ளவே இல்லையே என்பதை அறிந்து. பெற்றோர்களது பெருந்தன்மையை லூயி போற்றிக் கொண்டார்!

தனது அன்பு தாயையும், அருமை தந்தையையும், உடன் பிறந்த தங்கை, தம்பிகளையும், உற்ற நண்பர்களையும் கண்ட பிறகு, பாரிஸ் நகர் கல்வி நிலை அவருக்குக் கனவாய் மறைந்து போனது! அதை லூயி மீண்டும் நினைப்பதையே மறந்தார்!

ஆர்பாய் நகர் பள்ளியிலே சேர்ந்த லூயி பாஸ்டியர், தனது பழைய தலைமையாசிரியரைக் கண்டு மகிழ்ந்தார்; நண்பர்களோடு இணைந்து விளையாடினார்; பெற்றோர்களுடன் சேர்ந்து தோல் பதனிடும் தொழிற்சாலைக்குச் செல்வார்; வழக்கம் போல, தனது சித்திரம் எழுதும் பழக்கத்தையும் செய்தார். இவ்வாறு ஆர்பாய் பள்ளி வாழ்க்கையின் மகிழ்ச்சியை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்.